மாநகராட்சிக்கு தினமும் 150 எம்.எல்.டி., குடிநீர் சப்ளை குழாய் உடைப்பை உடனுக்குடன் சீரமைக்க நடவடிக்கை

மாநகராட்சிக்கு தினமும் 150 எம்.எல்.டி., குடிநீர் சப்ளை குழாய் உடைப்பை உடனுக்குடன் சீரமைக்க நடவடிக்கை


சேலம்:சேலம் மாநகராட்சியில், ஒரு லட்சம் வீட்டு குடிநீர் இணைப்புகள், 5,000 வணிக இணைப்புகளில் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. சில வாரங்களாக, வினியோகம் முறையாக இல்லை என குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தலைமையில் ஆய்வு கூட்டம் நடந்தது.
தொடர்ந்து கமிஷனர் இளங்கோவன், தனி குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும் தொட்டில்பட்டி மற்றும் நீரேற்று நிலையங்களை ஆய்வு செய்து பல்வேறு மாற்றங்களை மேற்கொள்ள உத்தரவிட்டார்.அதன்படி தொட்டில்பட்டியில், 3 மோட்டார்கள் செயல்பாட்டில் இருந்த நிலையில், தற்போது, 5 மோட்டார்களாக இயக்கப்படுகின்றன. இதனால், 115 முதல், 130 எம்.எல்.டி., வரை, மாநகராட்சிக்கு கொண்டு வரப்பட்ட குடிநீர், தற்போது அதிகபட்சமாக, 150 எம்.எல்.டி., வரை கொண்டுவரப்படுகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அழகாபுரத்தில் உள்ள தனிக்குடிநீர் திட்ட பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டது. உடனே மாநகராட்சி பணியாளர்களால் சரிசெய்து கான்கீரிட் கொட்டி மூடப்பட்டது.
இதுகுறித்து மாநகராட்சி அலுவலர்கள் கூறியதாவது: தனி குடிநீர் திட்டத்தில் பல ஆண்டுக்கு முன் போடப்பட்ட பழைய குடிநீர் குழாயில் நீர் வருகிறது. இதனால் பல இடங்களில் உடைப்பு ஏற்படுவதால் பிரஷர், தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டது. தற்போது கோடைகாலம் என்பதால் தேவை அதிகரித்து பற்றாக்குறை ஏற்பட்டதால், குழாய்களில் உடைப்பு ஏற்பட்டால் உடனுக்குடன் சரிசெய்து கொள்ள ஏற்பாடு செய்து, குடிநீர் பிரஷர், அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பெரும்பாலான பகுதிகளில் குடிநீர் வினியோகம் சீராகியுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement