நீரோடையில் கொட்டப்பட்ட ஆசிட் கலந்த கழிவு நீர்நிறம் மாறிய தடுப்பணை; செத்து மிதக்கும் மீன்கள்


நீரோடையில் கொட்டப்பட்ட ஆசிட் கலந்த கழிவு நீர்நிறம் மாறிய தடுப்பணை; செத்து மிதக்கும் மீன்கள்


ஈரோடு:ஈரோடு அருகே இரும்பு ஆலையின் ஆசிட் கலந்த கழிவுநீரை நீரோடையில் கொட்டியதால், தடுப்பணை நீர் ஆரஞ்சு நிறமாக மாறி, மீன்கள் செத்து மிதக்கின்றன. தண்ணீர் நிறம் மாறியதால், நான்கு தடுப்பணை, 27 கிணறுகள், நுாற்றுக்கும் மேற்பட்ட போர்வெல்களின் நீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஈரோடு பகுதியில் சாய, சலவை, தோல், பிளீச்சிங் ஆலை, இரும்பு ஆலை உள்ளிட்ட ஆலைகள், கழிவு நீரை முறையாக சுத்திகரிப்பு செய்யாமல், லாரி, பழைய கன்டெய்னர்களில் ஏற்றி காவிரி ஆறு, கீழ்பவானி, காளிங்கராயன் வாய்க்கால் ஓரம், அரசு புறம்போக்கு, வயல்வெளிகளில் கொட்டி செல்வது தொடர்கதையாக உள்ளது.
கடந்த, 18ம் தேதி இரவு, 10:15 மணி அளவில் ஈரோடு மாவட்டம் வில்லரசம்பட்டி அருகே ஆட்டையாம்பாளையத்தில், ஒரு லாரியில் இரும்பு ஆலையில் துருக்களை அகற்ற பயன்படுத்திய ஆசிட் கலந்த கழிவு நீரை ஏற்றி வந்து, கீழ்பவானி வாய்க்கால் கசிவு நீர் செல்லும் ஓடையில் கொட்டியுள்ளனர். அக்கழிவு நீரோட்டத்துடன் கலந்து அங்கிருந்து, 4 கி.மீ., துாரமுள்ள குளத்துப்பாளையம் தடுப்பணையில் சேர்ந்து, அடர் மஞ்சள் கலந்த ஆரஞ்சு நிறமாக மாறியது. தற்போது இந்த தண்ணீரில் லேசான ஆசிட் வாடை
வீசுகிறது. இந்நீர் நிலத்தடியில் இறங்கி வரும் வழியில், 4 தடுப்பணை, 27 கிணறு, நுாற்றுக்கும் மேற்பட்ட போர்வெல்களில் தண்ணீர் நிறம் மாறிவிட்டது. இதனால் தண்ணீரை மக்கள் குடிக்க முடியாமல், கால்நடைகள், விவசாயத்துக்கு பயன்படுத்த முடியாமல் தவிக்கின்றனர். நேற்று காலை முதல் மீன்கள் இறந்து மிதப்பதால், துர்நாற்றம் அதிகரித்து வருகிறது. மாவட்ட நிர்வாகம், மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் விரைவான நடவடிக்கை இல்லாததால் மக்கள் கொதித்து போயுள்ளனர்.
இதுகுறித்து ஈரோடு சுற்றுச்சூழல் பொறியாளர் ராஜ்குமார் கூறியதாவது: கடந்த, 18ம் தேதி இரவில் லாரியில் இரும்பு ஆலை கழிவை ஓடையில் கொட்டி சென்றுள்ளனர். 19ல் புகார் வந்ததும், அவ்விடத்தை ஆய்வு செய்து, 'சிசிடிவி' பதிவை ஆய்வு செய்து, லாரி மற்றும் டிரைவரை கண்டு பிடித்துள்ளோம். நேற்று முன்தினம் வரை, 25 லாரிகள் மூலம், 2.50 லட்சம் லிட்டர் வரை தண்ணீரை உறிஞ்சி, தொழிற் சாலைகளுக்கு வழங்கி, மறு சுத்திகரிப்பு செய்து பயன்படுத்த
வழங்கியுள்ளோம்.
அந்த ஆசிட் கலந்த கழிவு அடர் தன்மை குறைவு. தவிர தண்ணீர் ஓடுவதாலும், உறிஞ்சி அகற்றியதாலும், மேலும் ஆசிட் தன்மை குறைந்து, 640 முதல், 800 டி.டி.எஸ்.,க்குள் (டோட்டல் டிசால்வ்டு சாலிட்ஸ்) தான் உள்ளது. மனிதர், பிற உயிரினங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தாது. தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
இவ்வாறு கூறினார்.

Advertisement