தி.மு.க., ஆட்சியில் விவசாயிகள் போராடும் நிலையே ஏற்படவில்லை; அமைச்சர் பன்னீர்செல்வம் பெருமிதம்

சென்னை : தி.மு.க., ஆட்சியில், தமிழகத்தின் சாகுபடி பரப்பு, 151 லட்சம் ஏக்கராகவும், உற்பத்தி திறன் ஹெக்டேருக்கு 2,980 கிலோவாகவும் அதிகரித்துள்ளதாக, வேளாண் அமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் நேற்று, வேளாண் பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பதிலளித்து, அவர் பேசியதாவது:
ஒரு மாநிலத்தின் முதல்வராக இருந்தாலும், அனைத்து மாநிலங்களுக்கும் வழிகாட்டியாக, இந்தியாவுக்கே திசைகாட்டியாக முதல்வர் ஸ்டாலின் இருக்கிறார்.
தமிழகத்தில், 65 சதவீதம் பேர் விவசாயிகள். கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், போராட்டமே விவசாயிகளுக்கு வாழ்க்கையாக இருந்தது. ஆனால், தி.மு.க., ஆட்சியில், விவசாயிகள் போராடும் நிலையே ஏற்படவில்லை.
மாவட்டந்தோறும் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தி, 4,428 விவசாயிகளின் கருத்தை கேட்டு, அதன் அடிப்படையில் வேளாண் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் வைத்த, 2,535 கோரிக்கைகளில், 1,166 நிறைவேற்றப்பட்டு உள்ளன. மக்காச்சோளம் மேம்பாட்டு திட்டத்திற்கு, 40 கோடி ரூபாய், எண்ணெய் வித்துகள் உற்பத்தியை அதிகரிக்க, 128 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., விஜயபாஸ்கர் பேசும் போது, தமிழகத்தில் சாகுபடி பரப்பு குறைந்துள்ளதாக தெரிவித்தார். 2019- - 20ல் 146.77 லட்சம் ஏக்கராக இருந்த சாகுபடி பரப்பு, 151 லட்சம் ஏக்கராக அதாவது 4.23 லட்சம் ஏக்கர் உயர்ந்துள்ளது.
கடந்த 2019- - 20ல், 29.74 லட்சம் ஏக்கராக இருந்த இருபோக சாகுபடி பரப்பு, 2023 - -24ல், 39.60 லட்சம் ஏக்கராக உயர்ந்துள்ளது. 2011 முதல் 2021 வரை, 10 ஆண்டு கால அ.தி.மு.க., ஆட்சியில், 84 லட்சம் ஏக்கராக இருந்த சராசரி உணவு தானிய பரப்பு, உற்பத்தி, தி.மு.க., ஆட்சியில், 96 லட்சம் ஏக்கர், அதாவது 12 லட்சம் ஏக்கர் உயர்ந்துள்ளது.
அ.தி.மு.க., ஆட்சியில், 434.29 லட்சம் டன்னாக இருந்த உணவு தானிய உற்பத்தி, கடந்த நான்கு ஆண்டுகளில், 456.39 டன்னாக அதிகரித்துள்ளது.
அ.தி.மு.க., ஆட்சியில் ஹெக்டேருக்கு, 2,876 கிலோவாக இருந்த உணவு தானியங்களின் உற்பத்தி திறன், 2,980 கிலோ அதாவது 104 கிலோ அதிகரித்துள்ளது.
அகில இந்திய அளவில் கேழ்வரகு உற்பத்தியில் முதலிடத்திலும், மக்காச்சோளம், கரும்பு உற்பத்தியில் இரண்டாம் இடத்திலும், குறுதானியங்கள், நிலக்கடலை உற்பத்தியில் மூன்றாவது இடத்திலும், தமிழகம் உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.










மேலும்
-
விமானத்தில் நாயை அழைத்து செல்ல அனுமதி மறுப்பு; விரக்தியில் பெண் செய்த கொடூர செயல்!
-
அற்ப அரசியலால் தமிழக குழந்தைகள் பாதிப்பு; மும்மொழி விவகாரத்தில் மத்திய அமைச்சர் காட்டம்
-
வடக்கின் ஆதிக்கத்திற்கு தமிழகம் தலைவணங்காது; அமைச்சர் தங்கம் தென்னரசு திட்டவட்டம்
-
திருப்பதியில் மும்தாஜ் ஹோட்டல் அனுமதி ரத்து ஏழு மலைகளும் பெருமாளுக்கே சொந்தம்; சந்திரபாபு நாயுடு
-
அப்துல் கலாம் பாராட்டிய நேர்மை மீனவருக்கு கொடுமை
-
ரசாயனம் கலந்த 1,500 கிலோ தர்ப்பூசணி வள்ளுவர் கோட்டத்தில் பறிமுதல்