போலீசாருக்கு இலவச மருத்துவ காப்பீடு திட்டம்

அங்காளன் எம்.எல்.ஏ., கோரிக்கை

புதுச்சேரி: புதுச்சேரி பட்ஜெட் மீதான மானிய கோரிக்கை விவாதத்தில், அங்காளன் எம்.எல்.ஏ., பேசியதாவது;

புதுச்சேரி விளையாட்டு வீரர்கள் தேசிய மற்றும் மாநில அளவிலும் வெற்றி பெற்றாலும், மாநில அரசு எந்த வித நிதி உதவியும் அளிப்பதில்லை. விளையாட்டு வீரர்களுக்கு கடந்த 2009ம் ஆண்டு முதல் கொடுக்காமல் உள்ள உதவித்தொகை மற்றும் ஊக்க தொகையை வழங்க வேண்டும்.

உப்பளம் மைதானத்தில் பயன்பாட்டிற்கு வராமல் உள்ள சிந்தடிக் டிராக், பாகூர் உள் விளையாட்டு அரங்குகளை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும். ராஜிவ்காந்தி உள்விளையாட்டு அரங்கிற்கு ரூ. 4.5 கோடி மதிப்பில் ஏ.சி., வசதி செய்தும், இதுவரை மின் இணைப்பு வழங்கவில்லை. உள்ளாட்சி துறை மூலம் டெண்டர் எடுத்தவர்கள் பணிகளை முடிக்க கால நிர்ணயம் செய்யாததால், திருபுவனை தொகுதியில் பல ஆண்டுகளாக சாலை பணி நடந்து வருகிறது. திருபுவனை தொகுதியில் உள்ள 36 குளங்கள், பாசன வாய்க்கால்களை துர்வாரி நீர் ஆதாரத்தை உயர்த்த வேண்டும்.

உள்ளாட்சி துறை ஓய்வூதியதாரர்களுக்கு சம்பளம் வழங்குவதில் கால தாமதம் ஏற்படுகிறது. அரசு நிதி மூலம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். குற்றவாளிகளை பிடிக்க, கிரைம் மற்றும் கிரிமினல் டிராக்கிங் முறையை கொண்டுவர வேண்டும். போலீசாருக்கு இலவச மருத்துவ காப்பீடு, கூட்டுறவு வீட்டு வசதி சங்கம் உருவாக்க வேண்டும்.

பிற மாநிலங்களை போல், 10 ஆண்டு பணி முடித்த ஐ.ஆர்.பி.என்.,களை காவல் துறையில் சேர்க்க வேண்டும். 4 ஆண்டு காவலர்களுக்கான சீருடை அலவன்ஸ் வழங்குங்கள். சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பயன்பெறும் ரேம்ப் திட்டம் புதுச்சேரியில் செயல்வடிவம் கொடுக்க வேண்டும்.

தொழிற்சாலைகளுக்கு சலுகை அளிக்கும் புதிய தொழில் கொள்கையை உருவாக்கினால் தான், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். அதை விடுத்து மதுபான தொழிற்சாலையால் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்பது ஏமாற்று வேலை.

சென்டாக்கில் தணிக்கை செய்ய வேண்டும். தற்போதுள்ள கமிட்டியை கலைத்துவிட்டு, ஐ.ஏ.எஸ்., தலைமையில் புதிய கமிட்டியை உருவாக்க வேண்டும் என, கூறினார்.

Advertisement