ஆக்கிரமிப்புகளால் அதிகரிக்கும் போக்குவரத்து நெருக்கடி

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துாரில் பஸ் ஸ்டாண்ட், பஜார் வீதி, காய்கறி மார்க்கெட், பெரிய கடை பஜார், ஆண்டாள் கோயில் வீதிகள் என பல்வேறு இடங்களில் நாளுக்கு நாள் ஆக்கிரமிப்பு அதிகரித்து போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது.

இதனால் மக்கள் நடந்து செல்வதற்கு கூட சிரமத்திற்கு ஆளாகும் நிலை உள்ளது.

நகரின் மையப்பகுதியில் அரசு மருத்துவமனை, பஸ் ஸ்டாண்ட், பென்னிங்டன், காய்கறி மார்க்கெட், தனியார் மருத்துவமனைகள், பெண்கள் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளதால் பஸ் ஸ்டாண்ட் சுற்றியுள்ள ரோடுகளிலும், பள்ளிவாசல் முதல் ஆண்டாள் கோயில் வரையிலும் நாளுக்கு நாள் போக்குவரத்து நெருக்கடி அதிகரித்து வருகிறது.

இப்பகுதிகளில் வியாபார நிறுவனங்களின் ஆக்கிரமிப்புகள் நடைபாதையை கடந்து தார் ரோடு வரை காணப்படுவதால் மக்கள் எளிதில் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது.

காய்கறி மார்க்கெட்டின் உட்பகுதியில் நடைபாதை வரை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் மக்கள் எளிதில் வந்து செல்ல முடியாத நிலை உள்ளது.

பஸ் ஸ்டாண்டின் உட்பகுதியில் ஏற்கனவே பஸ்கள் நிற்கும் இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இடித்து கட்டப்படவுள்ள

கடைகளுக்கு மாற்றாக தற்காலிக தகர செட் கடைகள் அமைக்கப்பட்டு இருப்பது மேலும் போக்குவரத்து நெருக்கடியை ஏற்படுத்துகிறது.

பள்ளிவாசல் முதல் பெரிய கடை பஜார் வரை கடைகளின் ஆக்கிரமிப்புகளும், அதிகமான தள்ளுவண்டிகள் நிறுத்தப்படுவதாலும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது.

பெரிய கடை பஜாரில் கடைகள் போட்டி போட்டு நீட்டித்து வருவதால் காலை, மாலை வேலை நேரங்களில் மாணவர்கள், முதியவர்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

வடக்கு ரத வீதியில் மருத்துவமனைகள் இருக்கும் நிலையில் அதிகளவில் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதால் டூவீலரில் கூட எளிதாக பயணிக்க முடியவில்லை.

பெரிய கடை பஜாரில் இருந்து ஆண்டாள் கோயில் வாசல் வரை கடைகள் நீட்டித்துள்ள நிலையில் அங்கு வரும் மக்களின் டூவீலர்கள் நிறுத்த கூட இடமில்லை.

அரசு பஸ் டிப்போ முதல் ராமகிருஷ்ணாபுரம் சின்ன கடை வீதி வழியாக பஸ் ஸ்டாண்ட் வரை ஒரு காலத்தில் பஸ்கள், லாரிகள் சென்று வந்த நிலையில் தற்போது டூவீலர் செல்வதில் கூட சிரமப்பட வேண்டியது உள்ளது.

இவ்வாறு நகரின் அனைத்து பகுதிகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகளால் மக்கள் எளிதில் நடந்து செல்ல முடியாத அளவிற்கு போக்குவரத்து நெருக்கடி நிலவுகிறது.

போக்குவரத்து நெருக்கடியை சரிசெய்ய வேண்டும்



-மாரிமுத்து, சமூக ஆர்வலர்: நகரில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெருக்கடி அதிகரித்து வருகிறது.

மாணவர்கள், முதியவர்கள் கர்ப்பிணிகள் நடந்து செல்லும் நடைபாதைகளில் வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுகிறது.

இது தற்போது தார் ரோடு வரை அதிகரித்து வருகிறது. இளைஞர்கள் டூவீலர்களை தாறுமாறாக நிறுத்துவதால் நகரில் அனைத்து ரோடுகளிலும் போக்குவரத்து நெருக்கடியால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதனை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆக்கிரமிப்புகளை முழு அளவில் அகற்ற வேண்டும்



ஈஸ்வரன், சமூக ஆர்வலர்: நகரில் ஆக்கிரமிப்புகளை அகற்றி பல ஆண்டுகள் ஆகிவிட்டது. இதனால் பஜார் வீதிகளில் மக்கள் எளிதில் வந்து செல்ல முடியவில்லை. அவசர நேரத்தில் ஆம்புலன்ஸ்கள் அரசு மருத்துவமனைக்கு செல்ல முடியாத அளவிற்கு ஆக்கிரமிப்புகள் உள்ளது. மக்கள் படும் சிரமம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே, நகரின் அனைத்து வீதிகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை முழு அளவில் அகற்ற வேண்டும்.

Advertisement