மடை, கலுங்குகளில் உடைக்கப்படும் மதுபாட்டில்கள் மழைக்காலங்களில் அல்லல்படும் கண்மாய் பராமரிப்போர்

விருதுநகர்: விருதுநகர் மாவட்ட கண்மாய்களின் மடை, கலுங்குகளில் குடிமகன்கள் குடித்து விட்டு உடைத்து போடும் மதுபாட்டில்களால், மழைக்காலங்களில் நீர்வரத்து ஏற்படும் போது கண்மாய் பராமரிப்போர் பாதிக்கப்படுகின்றனர்.

மாவட்டத்தில் பொதுப்பணித்துறை, ஒன்றியத்திற்கு சொந்தமான கண்மாய்கள் அதிகளவில் உள்ளன. தற்போது குடிமகன்கள் அரசு பாரை தவிர்த்து பொது இடங்களில், மரத்தடியில் அமர்ந்து குடிப்பது அதிகரித்து வருகிறது. இதே போல் நீர்நிலைகளான கண்மாய், குளங்கள், ஊருணிகளிலும் வைத்து குடிக்கின்றனர். இதோடு நில்லாமல் சிலர் கூட்டமாக கண்மாய்களின் மடை, கலுங்குகளில் அமர்ந்து நீண்ட நேரம் குடித்துவிட்டு அந்த பாட்டில்களை கலுங்கில் குவிந்து கிடக்கும் கற்கள் மீது எறிந்து உடைத்து செல்கின்றனர். இந்த கண்மாய்கள் பெரும்பாலும் வறண்டு இருப்பதால் மடைகள், கலுங்குகள் திறந்த நிலையில் இருக்கும். மழை வரும் போது இதை அடைக்க வேண்டிய சூழல் வரும் போது, இது போன்று உடைத்து போட்ட பாட்டில்களால் கண்மாய் பராமரிப்போர் காயமடைகின்றனர்.

மடை, கலுங்குகள் ஓராண்டுக்கு மேலாக திறந்து, மூட எந்த வழியும் இல்லாததாலும், கண்மாயில் தண்ணீர் வரத்து குறைவாக உள்ளதாலும் இந்த நிலை தொடர்கிறது. துறை அதிகாரிகள் கண்மாய் மடையை சரி செய்வது கட்டாயம் தான் என்றாலும், இது போன்ற நீர்நிலைகளில் வைத்து குடித்து விட்டு பாட்டில்களை உடைப்பது கால்நடைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.

தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், நீர்நிலைகள் தேடி வரும் கால்நடைகள் காயம் ஏற்பட்டு தவிப்பில் விடப்படுகின்றன. எனவே மாவட்ட நிர்வாகம், பொதுப்பணித்துறை, ஒன்றிய அதிகாரிகளுக்கு இது போன்ற கண்மாய்களில் முறையாக பராமரிப்பை உறுதி செய்யவும், குடிமகன்களின் அட்டகாசத்தை தடுக்க எச்சரிக்கை பலகைகள் வைக்கவும் அறிவுறுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Advertisement