அமெரிக்காவிலிருந்து மேலும் 295 இந்தியர்கள் விரைவில் நாடு திரும்புகின்றனர்

9

புதுடில்லி : 'அமெரிக்காவில் இருந்து மேலும் 295 இந்தியர்கள் விரைவில் நாடு திரும்ப உள்ளனர். பிப்., 5ல் பஞ்சாபில் தரையிறங்கிய விமானத்தில், குறிப்பாக, பெண்களின் கை, கால்கள் விலங்கிடப்பட்டது தொடர்பாக, அமெரிக்க அரசிடம் தன் கவலைகளை மத்திய அரசு வலுவாக பதிவு செய்தது' என, வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.


அமெரிக்க அதிபராக, ஜன., 20ல் பதவியேற்ற குடியரசு கட்சியின் டொனால்டு டிரம்ப், அந்நாட்டில் சட்ட விரோதமாக குடியேறிய வெளிநாட்டினரை அவர்களது நாட்டுக்கு திருப்பி அனுப்ப உத்தரவிட்டார். இதன்படி பிப்ரவரியில், அமெரிக்காவில் இருந்து மூன்று கட்டங்களாக, 388 இந்தியர்கள் நம் நாட்டுக்கு வந்தனர்.


முதற்கட்டமாக, பஞ்சாபின் அமிர்தசரஸ் விமான நிலையத்தில் தரையிறங்கிய அமெரிக்க ராணுவ விமானத்தில், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோரின் கை, கால்கள் விலங்கிடப்பட்டிருந்தன. இதற்கு, மத்திய அரசு கண்டனம் தெரிவித்தது.


இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக, ராஜ்யசபாவில், மார்க்.கம்யூ., - எம்.பி., ஜான் பிரிட்டாஸ் எழுப்பிய கேள்விக்கு, வெளியுறவு அமைச்சகம் நேற்று அளித்த பதில்:


அமிர்தசரஸ் விமான நிலையத்தில் பிப்., 5ல் தரையிறங்கிய அமெரிக்க விமானத்தில், பெண்கள், குழந்தைகளின் கை, கால்கள் விலங்கிடப்பட்ட சம்பவம் குறித்து, அமெரிக்க அரசிடம் தன் கவலைகளை மத்திய அரசு வலுவாக பதிவு செய்தது. இதன் எதிரொலியாக, பிப்., 15, 16ல் தரையிறங்கிய விமானங்களில், பெண்கள், குழந்தைகளுக்கு எந்த கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை.


இதுவரை, 388 இந்தியர்கள் நாடு திரும்பி உள்ளனர். அவர்களில் 40 சதவீதம் பேர் பஞ்சாபையும், 34 சதவீதம் பேர் ஹரியானாவையும் சேர்ந்தவர்கள். அடுத்த கட்டமாக, அமெரிக்காவில் இருந்து, மேலும் 295 இந்தியர்கள் விரைவில் நாடு திரும்ப உள்ளனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement