மணிப்பூர் மக்களை ஒன்றிணைக்க உதவி; மத்திய அரசுக்கு ஆர்.எஸ்.எஸ்., உறுதி

பெங்களூரு; ''மணிப்பூர் மக்களை ஒன்றிணைக்க மத்திய அரசுக்கு நாங்கள் உதவுவோம்,'' என, ஆர்.எஸ்.எஸ்., இணை செயலர் சி.ஆர்.முகுந்தா கூறி உள்ளார்.

பெங்களூரு சன்னேனஹள்ளி ஜனசேவா வித்ய கேந்திராவில், மூன்று நாட்கள் நடக்கும் ஆர்.எஸ்.எஸ்., மாநாடு நேற்று துவங்கியது.

ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத், பொதுச் செயலர் தத்தாத்ரேயா ஹொசபெலே ஆகியோர், பாரத் மாதா சிலைக்கு மலர் வைத்து மரியாதை செலுத்தினர். இம்மாநாட்டில் ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்களும் பங்கேற்றனர்.

முன்னதாக ஆர்.எஸ்.எஸ்., இணை செயலர் சி.ஆர்.முகுந்தா அளித்த பேட்டி:

எங்கள் சித்தாந்த குடும்பத்துடன் இணைந்து பல்வேறு அமைப்புகளை சேர்ந்த தன்னார்வலர்கள், ஆர்வலர்கள், தென் மாநிலங்களில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த தங்களால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் செய்து வருகின்றனர்.

மொழி, தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்புத் தெரிவிப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டது. மத்திய அரசின் முடிவுகளை பற்றி பேச இது சரியான இடம் இல்லை.

நிர்வாக முடிவு



மொழி தொடர்பான பிரச்னைகள் எழுப்பப்படுகின்றன. இந்த பிரச்னைகளை தீர்க்க சமூக தலைவர்களும், சமூக குழுக்களும் ஒன்றிணைய வேண்டும். நமக்குள் சண்டையிடுவது நாட்டிற்கு நல்லது இல்லை.

இரு மொழி கொள்கையா அல்லது மும்மொழி கொள்கையா என்பது குறித்து ஆர்.எஸ்.எஸ்., எந்த தீர்மானத்தையும் நிறைவேற்றவில்லை. அனைத்து அன்றாட நடவடிக்கைகளையும் தாய்மொழியில் நடத்த வேண்டும் என்று விரும்புகிறோம். வடக்கு, தெற்கு என்று பிளவை உருவாக்குவதன் மூலம் தேசிய ஒற்றுமைக்கு சவால் விடும் சக்திகள் உள்ளன.

கடந்த 20 மாதங்களாக மணிப்பூர் மாநிலம் மோசமான சூழ்நிலையை எதிர்கொண்டுள்ளது. அங்கு நடந்த சம்பவங்களால் ஏற்பட்ட வலியை மறக்க நீண்ட காலம் ஆகும். மத்திய அரசின் சில நிர்வாக முடிவுகள், மணிப்பூர் மக்களுக்கு நம்பிக்கையை அதிகரித்து உள்ளது.

ஒரு சமூக அமைப்பாக நமது முயற்சிகள் மணிப்பூரில் சண்டையிட்டு கொண்டு இருக்கும், இரு குழுக்களை ஒன்றிணைப்பதை நோக்கமாக கொண்டு இருக்க வேண்டும்.

நுாற்றாண்டு விழா



இம்பால், கவுகாத்தி, டில்லியில் வைத்து இரு குழுக்களின் தலைவர்களுடன், நாங்கள் சந்திப்பு நடத்தி உள்ளோம். அரசியல் ரீதியாக தீர்க்கப்பட வேண்டிய பல பிரச்னைகள் உள்ளன.

இதற்கு மத்திய அரசு சில முடிவுகளை எடுக்க வேண்டும். மணிப்பூர் மக்களை ஒன்றிணைக்க, மத்திய அரசுக்கு நாங்கள் உதவுவோம்.

அடுத்த விஜயதசமி அன்று ஆர்.எஸ்.எஸ்., நிறுவப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவு பெறும். இதுவரை கடந்து வந்த பாதை, முன்னேறி செல்ல வேண்டிய பாதை குறித்து விவாதம் நடக்கும். இந்த ஆண்டு விஜய தசமி முதல் அடுத்த ஆண்டு விஜயதசமி வரை நுாற்றாண்டு விழா கொண்டாடப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement