மூதாட்டி கொலை வழக்கு வாலிபருக்கு 10 ஆண்டு சிறை; புதுச்சேரி நீதிமன்றம் தீர்ப்பு 

புதுச்சேரி : மூதாட்டியை கொலை செய்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து புதுச்சேரி நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

புதுச்சேரி, மூலக்குளம், வில்லியனுார் மெயின்ரோட்டைச் சேர்ந்தவர் சாந்தா, 64. இவரது கணவர் சுப்ரமணியன் இறந்து விட்டதால், உறவுக்கார பெண் ஒருவரின் துணையுடன் வசித்து வந்தார்.

கடந்த 2016 டிச., 26ம் தேதி சாந்தாவுடன் தங்கியிருந்த உறவுக்கார பெண் வெளியே சென்ற நிலையில், மறுநாள் காலை சாந்தா அவரது வீட்டில் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவர் கழுத்தில் அணிந்திருந்த 7 சவரன் நகை மாயமாகி இருந்தது.

அதேபகுதியை சேர்ந்த எழில் (எ) எழிலரசன், 30; மூதாட்டி கொலை செய்யப்பட்டு கிடப்பதாக போலீசுக்கு தகவல் கொடுத்தார். மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். சாந்தா அணிந்திருந்த 7 சவரன் நகையை வீட்டிற்குள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

தொடர் விசாரணையில், புகார் அளித்த எழில் (எ) எழிலரசன் மூதாட்டி சந்தாவை கொலை செய்தது தெரியவந்தது.

போலீசார் எழிலரசனை கைது செய்தனர். இந்த வழக்கு, நோக்கமில்லா கொலை, இந்திய தண்டனை சட்டம் பிரிவு 304 ஆக மாற்றப்பட்டது. புதுச்சேரி மூன்றாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்த இவ்வழக்கில், அரசு தரப்பில் வழக்கறிஞர் ரங்கநாதன் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி பாலமுருகன், குற்றம் சாட்டப்பட்ட எழிலரசனுக்கு, 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

Advertisement