எங்கள் எதிர்காலத்தின் மீதான தாக்குதல்: முதல்வர் ஸ்டாலின்

சென்னை: ''எங்கள் பிரதிநிதித்துவத்தை குறைக்கும் எந்த ஒரு முயற்சியும், எங்கள் குரல், எங்கள் உரிமை, எங்கள் எதிர்காலத்தின் மீதான தாக்குதல். எந்த ஒரு சூழ்நிலையிலும், எங்கள் பார்லிமென்டரி பிரதிநிதித்துவம் குறைவதை ஏற்றுக் கொள்ள மாட்டோம்,'' என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: முன் எப்போதும் இல்லாத ஒற்றுமையாக, முதல்வர்கள், துணை முதல்வர், பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் நாடு முழுவதும் இருந்து வந்திருந்து கூட்டு நடவடிக்கைக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த உணர்வு, இந்தியாவின் கூட்டாட்சி முறையை பாதுகாப்பதிலும், நியாயமான தொகுதி மறுவரையறையை வலியுறுத்துவதிலும், நமது உறுதியை வெளிப்படுத்துவதாக உள்ளது.
இந்த இயக்கம் என்பது, தொகுதி மறு வரையறைக்கு எதிரானது அல்ல. மக்கள் தொகை கட்டுப்பாட்டின் மூலம் நாட்டின் வளர்ச்சிக்கு பங்களித்த மாநிலங்கள் தண்டிக்கப்படக் கூடாது என்று கேட்பது தான் இதன் நோக்கம். எங்கள் பிரதிநிதித்துவத்தை குறைக்கும் எந்த ஒரு முயற்சியும், எங்கள் குரல், எங்கள் உரிமை, எங்கள் எதிர்காலத்தின் மீதான தாக்குதல். எந்த ஒரு சூழ்நிலையிலும், எங்கள் பார்லிமென்டரி பிரதிநிதித்துவம் குறைவதை ஏற்றுக் கொள்ள மாட்டோம். போராடுவோம். வெற்றி பெறுவோம். இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.










