தேசிய கல்விக்கொள்கை தாய்மொழியில் கல்வி கற்க முக்கியத்துவம் அளிக்கிறது: ஏ.ஐ.சி.டி.இ., தலைவர் சீதாராம் பேட்டி

கோவை: ''தாய்மொழியில் கற்றால் மட்டுமே புதிய கண்டுபிடிப்புகள் உருவாகும்,'' என, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் தலைவர் சீதாராம் கூறினார்.
கோவை வந்த அவர், நமது நாளிதழுக்கு அளித்த பேட்டி:
ஏ.ஐ.சி.டி.இ., தாய்மொழிக் கல்விக்கு முக்கியத்துவம் அளித்திருப்பதாக கூறப்படுகிறது; எந்த விதத்தில்?
தற்போது, 91 கல்லுாரிகளில் தாய்மொழிக் கல்வியை துவக்கி உள்ளோம். தமிழ் உட்பட, 12 மொழிகளில், 700 பாடப்புத்தகங்களை தயாரித்து, மாணவர்களுக்கு வழங்கியுள்ளோம். ஏ.ஐ.சி.டி.இ., யின், 'இ-கும்ப்' இணையதளத்தில், இன்ஜி., டிப்ளமோவுக்கான முதல், இரண்டாம் ஆண்டுக்கான இப்புத்தகங்கள் ஆன்லைனில் இலவசமாக கிடைக்கின்றன.
சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடங்களுக்கான பாடப்புத்தகங்கள் உள்ளன. பிற பாடப்புத்தகங்கள் தயாரிப்பும் நடக்கிறது. ஒவ்வொரு மாநில கல்வி நிறுவனத்துடனும், ஒப்பந்தம் செய்யப்பட்டு, அவர்கள் வாயிலாக பிராந்திய மொழி பாடப்புத்தகங்களை சரிபார்க்கிறோம்.
ஏ.ஐ.சி.டி.இ., உருவாக்கியுள்ள'அனுவாதினி' தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு வாயிலாக அரை மணி நேரத்தில், எந்த ஒரு பாடப்புத்தகத்தையும் மொழிபெயர்த்து தரும். இவ்வாறு, பல்வேறு வழிகளில் தாய்மொழிக்கல்வியை, ஏ.ஐ.சி.டி.இ., மேம்படுத்தி வருகிறது. தமிழகம் தாய்மொழிக்கல்வியில் மிகவும் மேம்பட்ட நிலையில் உள்ளது.
'
நீட்' போன்று இன்ஜினியரிங் கல்விக்கும், பொதுவான ஒரு நுழைவுத்தேர்வு ஏற்படுத்தும் ஏ.ஐ.சி.டி.இ.,யின் திட்டம் என்னவாயிற்று?
இன்ஜினியரிங் படிப்பை பல லட்சம் மாணவர்கள் பயில்கின்றனர். அவர்களுக்கு ஒரு பொதுவான நுழைவுத் தேர்வு சாத்தியமில்லை. ஆனால், பள்ளி மாணவர்களின் திறனை முறைப்படுத்த, பல கட்ட தேர்வுகள் நடத்த வேண்டியுள்ளது. பள்ளியில் மாணவர்கள் என்ன கற்றனர் என்பதை சோதிக்க வேண்டிய நிலை உள்ளது. இதை எப்படி மேற்கொள்வது என, திட்டமிட்டு வருகிறோம்.
இன்ஜினியரிங் அளவுக்கு பாலிடெக்னிக்குகளுக்கு முக்கியத்துவம் இல்லை. அங்கு ஆய்வகங்கள் இல்லாதது, ஆசிரியர்கள் பற்றாக்குறை என, பல பிரச்னைகள் உள்ளன. பாலிடெக்னிக்குகள் ஆய்வு செய்யப்படுகின்றனவா?
நேரடியாக நாங்கள் ஆய்வு மேற்கொள்வதில்லை. ஆனால், ஆன்லைன் வாயிலாக அனைத்து பாலிடெக்னிக்குகளும் ஆய்வு செய்யப்பட்ட பின்னரே, அனுமதி வழங்கப்படுகிறது. புகார்கள் வரும் போது, திடீர் சோதனை செய்கிறோம். எங்களது முதல் தர நிறுவனங்களான ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., உள்ளிட்டவற்றில் இருந்து, 900 ஆசிரியர்களை சோதனையாளர்களாக நியமித்துள்ளோம்.
இன்ஜி., கல்லுாரிகளில் ஆராய்ச்சிகளை அதிகரிக்க, ஏ.ஐ.சி.டி.இ., என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?
கடந்தாண்டு முதல் கல்லுாரிகளுக்கான அனுமதியில், ஒவ்வொரு கல்லுாரியும், 'இன்ஸ்ட்டிடியூட் இன்னோவேஷன் கவுன்சில்' என்ற அமைப்பை கொண்டிருக்க வேண்டும் என, விதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதை தொழில் நிறுவன பிரதிநிதிகள், கல்லுாரி பிரதிநிதிகள் குழு வழிநடத்த வேண்டும்.
இந்தாண்டு, இக்குழுவில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன பிரதிநிகளையும் கொண்டிருக்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் வாயிலாக ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் குறித்த கலாசாரம் அதிகரிக்க வாய்ப்பு ஏற்படும். ஏ.ஐ.சி.டி.இ., சார்பில், ஆராய்ச்சிகள், புதிய கண்டுபிடிப்புகள், காப்புரிமைகளுக்கு ஏராளமான நிதியுதவி வழங்கப்படுகிறது. அவற்றை பயன்படுத்த வேண்டும்.
தேசியக் கல்விக் கொள் கை, தாய்மொழிக் கல்வியை எப்படி ஆதரிக்கிறது?
தேசியக் கல்விக் கொள்கை என்பது, பல நெகிழ்வுத்தன்மைகளை கொண்டுள்ளது. மாணவர்கள் எப்போது வேண்டுமானாலும் நுழைய, வெளியேற வழிவகை உள்ளது. அதேபோல், தாய்மொழியில் கல்வி பயின்றால் மட்டுமே, அனைத்து விஷயங்களையும் மாணவர்கள் முழுமையாக அறிந்து கொள்ள முடியும் எனக்கூறுகிறது. இதன் வாயிலாக, பல்வேறு புதிய கண்டுபிடிப்புகள் வரும் என அது தெரிவிக்கிறது. தேசியக் கல்விக் கொள்கை யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. தாய்மொழியில் கற்றால் மட்டுமே புதிய கண்டுபிடிப்புகள் வரும் என, அது தெரிவிக்கிறது.















மேலும்
-
மதுரையில் போலீஸ்காரர் எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கு; குற்றவாளி சுட்டுப்பிடிப்பு
-
காந்தியவாதி கிருஷ்ண பாரதியின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்
-
மாமனாரை ஏமாற்ற ரூ.40 லட்சம் கொள்ளை போனதாக நாடகம்; கேரளாவில் கில்லாடி மாப்பிள்ளை கைது
-
அடிப்படை பணியாளர்களுக்கு எதிரான அரசாணை 325ஐ ரத்து செய்ய வேண்டும் மருத்துவமனை ஊழியர்கள் வலியுறுத்தல்
-
50 பைசா செலவில் அஹிம்சை போராட்டம் டி.இ.டி., நியமனத் தேர்வர்கள் நுாதன எதிர்ப்பு
-
வெப்பநிலை இன்று 4 டிகிரி அதிகரிக்கும்