போலீசை தாக்கி தப்பிய கேரள வாலிபர் சுட்டுப்பிடிப்பு

மைசூரு : விசாரணைக்கு அழைத்துச் சென்றபோது, எஸ்.ஐ., - போலீஸ்காரரை பீர் பாட்டிலால் தாக்கித் தப்பிக்க முயன்ற கேரள வாலிபர் சுட்டுப்பிடிக்கப்பட்டார்.

கேரளாவின் வயநாட்டை சேர்ந்தவர் சுபின். தொழிலதிபர். கடந்த மாதம் பெங்களூருக்கு வேலை விஷயமாக வந்தார். பின், காரில் தனியாக வயநாடு சென்றார்.

மைசூரு ஜெயபுரா பகுதியில் சென்றபோது, காரை வழிமறித்த ஏழு பேர் சுபினை தாக்கினர்.

அவர் அணிந்திருந்த தங்க நகைகளை பறித்துத் தப்பினர். இவ்வழக்கில் ஏற்கனவே 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

நேற்று முன்தினம் கேரளாவின் சுல்தான்பத்தேரியை சேர்ந்த ஆதர்ஷ், 32, உட்பட மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். நேற்று காலை கொள்ளை நடந்த இடத்திற்கு, ஆதர்ஷை விசாரணைக்காக ஜெயபுரா போலீசார் அழைத்துச் சென்றனர்.

அப்போது இயற்கை உபாதை கழிக்க வேண்டுமென கூறி ஆதர்ஷ் சென்றார். அந்த இடத்தில் கிடந்த பீர் பாட்டிலை உடைத்து, எஸ்.ஐ., பிரகாஷ், போலீஸ்காரர் ஹரிஷ் ஆகியோரை தாக்கிவிட்டு தப்பி ஓடினார்.

அதிர்ச்சி அடைந்த இன்ஸ்பெக்டர் தீபக், துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு, சரண் அடையும்படி எச்சரித்தார்.

ஆதர்ஷ் கேட்கவில்லை. இதனால் ஆதர்ஷின் இடது காலில் இன்ஸ்பெக்டர் தீபக் துப்பாக்கியால் சுட்டார்.

சுருண்டு விழுந்த ஆதர்ஷும், அவர் தாக்கி காயமடைந்த எஸ்.ஐ., பிரகாஷ், போலீஸ்காரர் ஹரிஷ் ஆகியோர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

Advertisement