மெஜஸ்டிக் மெட்ரோ ரயில் நிலையம் மீது ஷாப்பிங் மால், திரையரங்கு, ஹோட்டல்

பெங்களூரு : மெஜஸ்டிக் மெட்ரோ ரயில் நிலையம் மீது ஷாப்பிங் மால், திரையரங்கம், ஹோட்டல் ஆகியவை கட்டுவதற்கு பெங்களூரு மெட்ரோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

பெங்களூரு மெட்ரோ நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:

பெங்களூரின் மெஜஸ்டிக் இன்டர்சேஞ்ச் மெட்ரோ ரயில் நிலையம் மீது, 31,920 சதுர அடி பரப்பளவு காலியிடம் உள்ளது.

இந்த இடத்தை வர்த்தக நோக்கத்துக்கு பயன்படுத்த, மெட்ரோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

மெஜஸ்டிக் மெட்ரோ நிலையம் மீது எட்டு மாடிகள் கட்ட திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது. இங்கு திரையரங்கு, ஹோட்டல், ஷாப்பிங் மால் கட்ட டெண்டர் அழைக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் ஒருங்கிணைப்பில் திட்டம் செயல்படுத்தப்படும்.

மூன்று ஆண்டுகளில் கட்டட பணிகள் முடிய வேண்டும். முதல் இரண்டு மாடிகள், கார் 'பார்க்கிங்'குக்கு ஒதுக்கப்படும். ஆசியாவின் மிகப்பெரிய சுரங்க மெட்ரோ நிலையம் என, அழைக்கப்படும் மெஜஸ்டிக் நிலையம் கட்ட, கே.எஸ்.ஆர்.டி.சி.,யின் 7.5 ஏக்கர் இடத்தை மெட்ரோ நிறுவனம் கையகப்படுத்தியது.

மெஜஸ்டிக் மெட்ரோ நிலையம் கட்டி முடிக்கப்பட்டு, 2016ம் ஆண்டு முதல் செயல்படுகிறது. தினமும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பயணியர் பயணம் செய்கின்றனர்.

கே.ஆர்.புரம் மெட்ரோ ரயில் நிலையம் அருகில், பலமாடி பார்க்கிங் கட்ட, மெட்ரோ நிறுவனம் ஆலோசிக்கிறது. அதே போன்று மைசூரு சாலை மெட்ரோ ரயில் நிலையம் உட்பட, மற்ற பகுதிகளில் உள்ள இடம் வர்த்தக நோக்கத்துக்கு பயன்படுத்தப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement