மறுவரையறையை ஒத்திவைக்க கோரும் தீர்மானம்; பிரதமரிடம் நேரில் அளிப்போம்: கனிமொழி

சென்னை: 'தொகுதி மறுசீரமைப்பை 25 ஆண்டுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வழங்குவோம்' என தி.மு.க., எம்.பி., கனிமொழி தெரிவித்தார்.
சென்னை கிண்டியில் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக, கூட்டுக்குழு கூட்டத்தில், தொகுதி மறுசீரமைப்பை 25 ஆண்டுகளுக்கு ஒத்தி வைக்க வேண்டும். அதை பார்லிமென்டில் பிரதமர் அறிவிக்க வேண்டும்,'' என்று வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இது குறித்து நிருபர்கள் சந்திப்பில், தி.மு.க., எம்.பி., கனிமொழி கூறியதாவது: தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் மத்திய அரசு மாநில அரசுகளுடன் கலந்து ஆலோசிக்க வேண்டும். தொடர்ந்து தமிழகத்திற்கு எதிரான நிலைப்பாட்டை பா.ஜ., எடுத்து வருகிறது. மக்கள் தொகையை சிறப்பாக கட்டுப்படுத்திய மாநிலங்கள் வஞ்சிக்கப்படக்கூடாது என்பது எங்கள் நோக்கம்.
எனவே தொகுதி மறுசீரமைப்பை 25 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த விவகாரத்தில் மத்திய அரசின் அறிவிப்பு தெளிவை ஏற்படுத்தவில்லை. குழப்பத்தையே ஏற்படுத்தி உள்ளது.
இன்றைய கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை பிரதமரை நேரில் சந்தித்து வழங்குவோம். தொகுதி மறுசீரமைப்பை வெளிப்படை தன்மையுடன் மத்திய அரசு, 1971ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு கனிமொழி கூறினார்.













