முல்லைப்பெரியாறு அணையில் மத்திய கண்காணிப்பு குழு!

4

கூடலூர்: முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக புதிதாக அமைக்கப்பட்ட மத்திய கண்காணிப்பு குழுவின் முதல் ஆய்வு அணை பகுதியில் நடந்தது.

2024 அக்டோபர் 1 முதல் முல்லைப் பெரியாறு அணை தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஏற்கனவே பெரியாறு அணை பராமரிப்பு பணிக்காக அமைக்கப்பட்டிருந்த மத்திய கண்காணிப்பு குழு, துணை கண்காணிப்பு குழு ஆகிய இரண்டும் கலைக்கப்பட்டது.


புதிதாக தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் அணில் ஜெயின் தலைமையில் 7 பேர் கொண்ட புதிய கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது. இக்குழுவில் தமிழக அரசு சார்பில் நீர்வளத் துறை கூடுதல் தலைமைச் செயலர் மங்கத் ராம் சர்மா, காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் சுப்பிரமணியன், கேரள அரசு சார்பில் கூடுதல் தலைமைச் செயலர் டிங்கு பிஸ்வால், கேரள நீர்வளத்துறை தலைமை பொறியாளர் பிரியேஸ் மற்றும் இரண்டு தொழில்நுட்ப வல்லுநர்கள் என ஏழு பேர் உள்ளனர்.


இக்குழுவின் முதல் ஆய்வு அணைப்பகுதியில் நடந்தது. முன்னதாக தேக்கடியில் இருந்து படகு மூலம் அணைப் பகுதிக்குச் சென்றனர். அங்கு மெயின் அணை, பேபி அணை, நீர்க்கசிவுக்காலரி, ஷட்டர் பகுதிகள் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு நடத்தினர். ஆய்வுக்குப் பின் குமுளியில் உள்ள பொதுப்பணித்துறை கண்காணிப்பு அலுவலகத்தில், இக்குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

Advertisement