பார்களில் பெண்கள் வேலைக்கு எதிர்ப்பு; பா.ஜ., மகளிர் அணியினர் முற்றுகை போராட்டம்

கோல்கட்டா: பார்களில் பெண்கள் வேலை செய்ய அனுமதிக்கும் சட்டத்திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பா.ஜ., மகளிர் அணியினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கடந்த 19ம் தேதி மேற்கு வங்க சட்டசபையில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் சந்திரிமா பட்டாச்சாரியா கொண்டு வந்த கலால் வரி சட்டத்திருத்த மசோதா பெரும்பாலான உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. இதன்மூலம், பார் வசதி இருக்கும் கடைகளில் பெண்கள் பணிபுரிய அனுமதி வழங்கப்பட்டது.


பார்களில் பெண்களை வேலைக்கு அனுமதிக்கும் இந்த சட்ட திருத்த மசோதாவுக்கு பா.ஜ., உள்ளிட்ட கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.


இந்த நிலையில், கோல்கட்டாவில் உள்ள மாநில கலால் வரித்துறையின் அலுவலகத்தை பா.ஜ., மாநில தலைவர் சுகந்தா மஜூம்தார் தலைமையில் நுற்றுக்கணக்கான பெண்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்த சட்டத்திருத்தத்தை திரும்பப் பெறக் கோரி அவர்கள் கோஷமிட்டனர். அப்போது, தடுப்புகளை அமைத்து அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால், அங்கு பரபரப்பு நிலவியது.


இது குறித்து பா.ஜ., தலைவர் அக்னிமித்ரா பால் கூறுகையில், " பார்களில் வேலை செய்ய அனுமதித்து, பெண்களை மேற்குவங்க அரசு சிறுமைப்படுத்துகிறது. இதுதான் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதா? இதுபோன்ற அதிகாரம் அளித்தல் தேவையில்லை. தொடர்ந்து இதனை எதிர்ப்போம்," இவ்வாறு கூறினார்.

Advertisement