இந்தியாவை சேர்ந்த தந்தை, மகள் சுட்டுக்கொலை; அமெரிக்காவில் அதிர்ச்சி!

வாஷிங்டன்: அமெரிக்காவில் இந்தியாவை சேர்ந்த தந்தை, மகள் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவின் வர்ஜீனியாவில் இந்தியாவை சேர்ந்த பிரதீப் குமார் படேல், 56, என்பவர் பல்பொருள் அங்காடி ஒன்று நடத்தி வந்துள்ளார். இந்த கடையில் அவரது மகள் ஊர்மி (Urmi), 24, மற்றும் உறவினர்கள் பணிபுரிந்து வந்தனர். பிரதீப் குமார் படேல், அவரது மனைவி ஹன்சபென் மற்றும் அவர்களது மகள் ஊர்மி ஆகியோர் குஜராத்தின் மெஹ்சானா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், ஆறு ஆண்டுக்கு முன்பு அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தனர்.
இந்நிலையில், பல்பொருள் அங்காடியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில், பிரதீப் குமார் படேல் மற்றும் அவரது மகள் ஊர்மி உயிரிழந்தனர். கடை திறக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே இந்த துப்பாக்கிச் சூடு நடந்தது.
இந்த இரட்டைக் கொலை தொடர்பாக ஜார்ஜ் ப்ரேசியர் டெவோன், 44, என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இவனிடம் கொலை செய்ததற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிரதீப் குமார் படேல் மற்றும் ஹன்சபென் ஆகியோருக்கு இன்னும் இரண்டு மகள்கள் உள்ளனர். ஒருவர் கனடாவிலும், மற்றொருவர் ஆமதாபாத்திலும் வசிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.



