சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவில்லை; குறட்டை விடும் அரசு என அன்புமணி குற்றச்சாட்டு

10


சென்னை: 'தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க முடியாமல் தி.மு.க., அரசு குறட்டை விட்டு உறங்கிக் கொண்டிருக்கிறது' என பா.ம.க., தலைவர் அன்புமணி விமர்சனம் செய்துள்ளார்.


அவரது அறிக்கை: மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்த தனக்கன்குளத்தைச் சேர்ந்த காளீஸ்வரன் என்ற ரவுடி நள்ளிரவில் அவரது வீட்டு வாயிலில் வைத்து கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். தமிழ்நாட்டில் திட்டமிட்ட படுகொலைகள் நடக்காத நாளே இல்லை என்று கூறும் அளவுக்கு நிலைமை மோசமடைந்து வரும் நிலையில் அதைத் தடுக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத்தக்கது.

தமிழகத்தில் கொலைகள் நடக்கும் போதெல்லாம் அவை தனிப்பட்ட காரணங்களுக்காக நடத்தப்பட்டது என்றும், கொலையாளிகளை விரைவாக கைது செய்து விட்டோம் என்றும் கூறி சிக்கலை திசை திருப்புவதையே தி.மு.க., அரசு வாடிக்கையாகக் கொண்டிருக்கிறது.

ஆனால், காளீஸ்வரன் விவகாரத்தில் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பது தெரிந்தும் கூட, சிறையிலிருந்து தீட்டப்பட்ட சதித் திட்டத்தை முறியடிக்க முடியாமல் தி.மு.க., அரசு தோல்வியடைந்திருக்கிறது.



தமிழகத்தில் ஒரு நாளைக்கு சராசரியாக 4.52 படுகொலைகள் வீதம் தி.மு.க., ஆட்சிக்கு வந்த 4 ஆண்டுகளில் மட்டும் 6597 படுகொலைகள் நடந்துள்ளன. இந்த எண்ணிக்கை அச்சமூட்டும் வகையிலும், கவலையளிக்கும் வகையிலும் இருக்கும் போதிலும் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றங்களைத் தடுத்து தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க முடியாமல் தி.மு.க., அரசு குறட்டை விட்டு உறங்கிக் கொண்டிருக்கிறது. இனியாவது உறக்கத்தைக் கலைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அன்புமணி கூறியுள்ளார்.

Advertisement