அறிவே கடவுள் என வலியுறுத்தும் புத்தக கோவில்; பக்தர்களுக்கு புத்தகமே பிரசாதம்!

7


கண்ணனுார்: கேரளாவின் செருபுழா அருகே அமைந்துள்ள கோவிலில் புத்தகமே தெய்வமாக வணங்கப்படுகிறது. வழிபடும் பக்தர்களுக்கு புத்தகமே பிரசாதமாக வழங்கப்படுகிறது.


கேரளாவின் கண்ணனுார் மாவட்டத்தில் செருபுழா அருகே பிரபோயில் என்ற குக்கிராமம் உள்ளது. இங்கு நவபுரம் மாதாதீத்த தேவாலயத்தில் புத்தகமே தெய்வமாக வணங்கப்படுகிறது. உலகுக்குரிய கடவுளின் இல்லம் என்றும் பெயர் குறிப்பிடப்படும் இந்த கோவில், 2021ம் ஆண்டு மார்ச் 4ம் தேதி திறக்கப்பட்டுள்ளது.


கல்லில் வடிக்கப்பட்ட புத்தகமே, மூலவராக இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
காசர்கோடு மாவட்டத்தை சேர்ந்த சிற்பி சந்தோஷ் மானசன் இந்த புத்தக மூலவரை வடிவமைத்துள்ளார். பக்தர்கள், மூலவரை வணங்கி, புத்தகங்களை காணிக்கையாக செலுத்தலாம். பிரசாதமாகவும் புத்தகமே வழங்கப்படுகிறது.



இங்கு அர்ச்சகர்கள் எவரும் இல்லை. உண்டியலும் இல்லை. அனைத்து சமுதாயத்தினரும் இங்கு வழிபாடு நடத்தலாம். கடவுளாக வழிபாடு செய்யப்படும் புத்தகத்தில், 'அறிவே கடவுள்; மதம் என்பது பரந்த சிந்தனை; பணிவு கொண்ட அறிவே சிறந்த பாதை' என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

இந்த கோவிலின் முன் மண்டபத்தில், சில ஆயிரம் புத்தகங்களை கொண்ட நுாலகம் அமைக்கப்பட்டுள்ளது. இரண்டு ஏக்கரில் அமைந்துள்ள இந்த வளாகத்தில், 3 தங்கும் விடுதிகளும் உள்ளன. அவற்றில் எழுத்தாளர்கள் தங்கி தங்கள் எழுத்துப்பணியை மேற்கொள்ள அனுமதிக்கின்றனர்.


இந்த கோவில், பிரபோயில் நாராயணன் என்பவரது கனவில் உருவாகி உருப்பெற்றது. எழுத்தாளரான நாராயணன், 26 நுால்களை எழுதியுள்ளார். டுடோரியல் கல்லுாரியும் நடத்தி வருகிறார். 60 லட்சம் ரூபாய் செலவில் புத்தக கோவிலை உருவாக்கியுள்ளார் நாராயணன்.


ஏப்ரல் மாதத்திலும், தசரா விடுமுறை நாட்களிலும் இங்கு கலாசார விழாக்கள் நடத்தப்படுகின்றன. இலக்கிய விவாதங்கள், பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், புத்தக வெளியீடுகள், கருத்தரங்குகள் நடத்தப்படுகின்றன. 'உலகில் புத்தகமே தெய்வமாக வழிபடப்படும் ஒரே கோவில் இதுதான்' என்கின்றனர், உள்ளூர் மக்கள்.

Advertisement