அமெரிக்க சட்டத்தை மதித்து நடக்க வேண்டும்: மாணவர்களுக்கு இந்தியா அறிவுரை

11

வாஷிங்டன்: '' அமெரிக்காவில் படிக்கும் இந்திய மாணவர்கள் அந்நாட்டு சட்டத்தை மதித்து நடக்க வேண்டும்,'' என மத்திய அரசு அறிவுரை வழங்கி உள்ளது.


இந்தியாவைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்றுள்ளனர். மாணவர் விசா எடுத்து படித்து வருகின்றனர்.


இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, அமெரிக்காவில் தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவிக்கப்பட்டு உள்ள ஹமாசுக்கு ஆதரவான போராட்டங்களில் பங்கேற்றதாக இந்திய மாணவி ரஞ்சனி ஸ்ரீநிவாசன் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து அவரது விசாவை அமெரிக்கா ரத்து செய்தது. அவர் தாமாக முன்வந்து அங்கிருந்து வெளியேறி கனடாவிற்கு சென்றார்.


அதேபோல் பாதர் கான் சூரி என்ற ஆராய்ச்சி மாணவர் ஹமாசுக்கு ஆதரவாக செயல்பட்டதாக அமெரிக்க போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரை நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.


இது தொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெயிஸ்வால் கூறியதாவது: இந்தியா வரும் வெளிநாட்டினர், நமது நாட்டு சட்ட திட்டங்களை மதித்து நடக்க வேண்டும் என நாம் எதிர்பார்க்கிறோம். அதேபோல், வெளிநாடுகளுக்கு செல்லும் இந்திய மாணவர்கள் அந்நாட்டின் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை மதித்து நடக்க வேண்டும் எனவும் நாங்கள் எதிர்பார்க்கிறோம். அமெரிக்காவில் உள்ள இந்திய மாணவர்களுக்கு பிரச்னை ஏற்பட்டால், அவர்களுக்கு உதவ தூதரகம் மற்றும் துணைத் தூதரக அலுவலகங்கள் தயாராக உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement