காங்கிரஸ் ஆட்சியில் சுயசார்பு இந்தியா: கார்கே

22


புதுடில்லி: '' காங்கிரஸ் ஆட்சியில் தான் சுயசார்பு இந்தியா இருந்தது என்பதை பிரதமர் மோடி உணர்வார்,'' என காங்கிரஸ் தலைவர் கார்கே கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: வாக்குறுதி நிறைவேற்றம் என்பதை விட விளம்பரத்திற்கு தான் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்பதற்கு ' மேக் இன் இந்தியா' திட்டம் மிகச்சிறந்த உதாரணம்.

கடந்த 2014 தேர்தல் வாக்குறுதியில் இந்தியாவில் உலகின் உற்பத்தி மையமாக மாற்றுவோம் என பா.ஜ.,10 வாக்குறுதிகளை அளித்து இருந்தது. அதில் ஒன்று கூட நிறைவேற்றப்படவில்லை. உற்பத்தி துறையில் வேலைவாய்ப்பு மற்றும் ஜிடிபியில் உற்பத்தி துறையின் பங்கு கடுமையாக குறைந்து நிலைமை இன்னும் மோசமாக மாறி உள்ளது. பொதுத்துறை நிறுவனங்கள் விற்கப்படுகின்றன. சிறுகுறு நடுத்தர தொழில்துறை பாதிப்பை சந்தித்துள்ளது. இந்திய தொழில்முனைவோர் வெளிநாடுகளுக்கு செல்கின்றனர். அவர்கள் இந்தியாவிற்கு முக்கியத்துவம் தராமல், அங்கேயே நிறுவனங்களை அமைக்கின்றனர். ஏற்றுமதி வீழ்ச்சியடைந்து வருகிறது.

இரண்டு முக்கியமான கேள்விகள்
1.அடையாளம் காணப்பட்ட 14 துறைகளில் 12 துறைகள் மேம்பட தவறியதால், பரபரப்பாக பேசப்பட்ட ரூ.1.97 லட்சம் கோடி மதிப்பிலான உற்பத்தியோடு இணைந்த ஊக்குவிப்பு திட்டத்தின் முதல் கட்டத்தை மோடி அரசு மூடி விட்டதா

2. மோடி ஆட்சியின் கீழ், இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் இந்திய பொருட்களின் பங்கு கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவு குறைந்தது ஏன்

ஆனால் இந்தியாவின் வரலாற்றில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது தான் வளர்ச்சி பெற்றது. காங்கிரஸ் ஆட்சியில் தான் சுயசார்பு இந்தியா இருந்தது என்பதை பிரதமர் மோடி உணர்ந்து இருப்பார். இவ்வாறு அந்த அறிக்கையில் கார்கே கூறியுள்ளார்.

Advertisement