மீண்டும் முழுவீச்சில் இயங்கும் லண்டன் விமான நிலையம்

லண்டன்: லண்டன் துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக அருகே இருந்த சர்வதேச விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்ட நிலையில், நேற்று முழுவீச்சில் இயங்கியது.

ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டனில் சர்வதேச விமான நிலையம் அருகே துணை மின் நிலையம் உள்ளது. இங்கு, எதிர்பாராதவிதமாக நேற்று முன்தினம் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

இதன் காரணமாக சுற்று வட்டார பகுதி முழுதும் கரும்புகை சூழ்ந்தது. தீ விபத்து நிகழ்ந்த பகுதி, விமான நிலையத்தில் இருந்து 3 கி.மீ., தொலைவில் இருந்ததால் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது.தீயை கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்பு துறையினர் திணறியதால், லண்டனில் உள்ள ஹீத்ரு சர்வதேச விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது.

இங்கு விமானங்கள் தரையிறங்க முடியாததால், வெவ்வேறு இடங்களுக்கு திருப்பி விடப்பட்டன. நேற்று முன்தினம் மட்டும் 1,300க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன; இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டனர்.

இதற்கிடையே, துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட தீயை, ஏழு மணி நேர போராட்டத்திற்கு பின் தீயணைப்பு படையினர் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதையடுத்து, ஹீத்ரு சர்வதேச விமான நிலையம், மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக நேற்று திறக்கப்பட்டது.

பெரும்பாலான விமானங்கள் நேற்று இயக்கப்பட்டாலும், பயணியர் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

தீ விபத்து காரணமாக வெவ்வேறு இடங்களில் விமானங்கள் தரையிறக்கப்பட்டதால், அவற்றை ஒருங்கிணைத்து இயக்குவதில் விமான நிறுவனங்கள் பெரும் சிரமத்தை சந்தித்தன.

இதனால், பல விமானங்கள் தாமதத்துடன் புறப்பட்டன. சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

இதனால் பயணியர் சிலர், விமான நிறுவன அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Advertisement