சத்தீஸ்கர் எழுத்தாளருக்கு ஞானபீட விருது

புதுடில்லி: பிரபல ஹிந்தி எழுத்தாளர் வினோத் குமார் சுக்லாவுக்கு, இந்த ஆண்டுக்கான ஞானபீட விருது வழங்கப்படுகிறது.

நம் நாட்டில் இலக்கியத்துக்கான சிறந்த பங்களிப்பை வழங்கும் எழுத்தாளர்களை பாராட்டி ஞானபீட விருது வழங்கப்படுகிறது. மறைந்த பிரபல தமிழ் எழுத்தாளர்கள் அகிலன், ஜெயகாந்தன் உட்பட 58 பேர், இதுவரை ஞானபீட விருதை பெற்றுள்ளனர்.

இந்நிலையில், 59வது ஞானபீட விருது தொடர்பாக ஞானபீட தேர்வுக் கமிட்டியின் கூட்டம் நேற்று நடந்தது.

சத்தீஸ்கரைச் சேர்ந்த பிரபல ஹிந்தி எழுத்தாளர் வினோத் குமார் சுக்லா, 88, விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார்.

சத்தீஸ்கரைச் சேர்ந்த ஒருவர், இந்த விருதை பெறுவது, இதுவே முதல் முறை. எழுத்தாளர் வினோத் குமார், ஹிந்தியில் ஏராளமான சிறுகதைகள், கவிதை, கட்டுரைகள் எழுதியுள்ளார். கடந்த 1999-ல் சாகித்ய அகாடமி விருதும் பெற்றுள்ளார்.

ஞான பீட விருது பெறுவோருக்கு, பாராட்டு சான்றிதழுடன், 11 லட்சம் ரூபாய், கல்விக் கடவுளான சரஸ்வதி தேவியின் வெண்கல சிலை ஆகியவை வழங்கப்படும்.

Advertisement