பயிற்சி டாக்டர் தாக்கப்பட்ட சம்பவம் டாக்டர்கள் சங்கம் கண்டனம்
சென்னை, கே.கே.நகர் இ.எஸ்.ஐ., மருத்துவ கல்லுாரி பயிற்சி டாக்டரை, தாக்கிய பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அரசு டாக்டர்களுக்கான சட்ட போராட்ட குழு தெரிவித்து உள்ளது.
இதுகுறித்து, அக்குழுவின் தலைவர் பெருமாள் பிள்ளை வெளியிட்ட அறிக்கை:
சென்னை கே.கே.நகர் இ.எஸ்.ஐ., மருத்துவ கல்லுாரியில் பயிற்சி டாக்டர் சாப்பிடுவதற்காக, ஆன்லைனில் ஆர்டர் செய்துள்ளார். அங்குள்ள ஒப்பந்த பணியாளர் ஒருவர், இரவில் 9:00 மணிக்கு மேல் ஆன்லைன் ஆர்டர் தரக்கூடாது என, அதிகார தோரணையில் தெரிவித்துள்ளார்.
'நீங்க யார்?' என, பயிற்சி டாக்டர் அவரிடம் கேட்டப்போது, கல்லுாரி முதல்வரின் உதவியாளர் என தெரிவித்தார். பின், பயிற்சி டாக்டரையும் கடுமையாக தாக்கினார். இதில், பயிற்சி டாக்டரின் தோள்பட்டை விலகி உள்ளது.
பயிற்சி டாக்டர், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தை கண்டிக்கிறோம். பயிற்சி டாக்டரை தாக்கியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதுடன், பணி நீக்கம் செய்ய வேண்டும்.
இந்த சம்பவம் அங்கும் படிக்கும் மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் பீதியை ஏற்படுத்தி உள்ளது. வருங்காலங்களில் இதுபோன்ற சம்பவம் நடைபெறாத வகையில், கல்லுாரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.