வங்கியில் கடன் பெற்று மோசடி ஆந்திராவை சேர்ந்த 4 பேர் கைது

சென்னை, அமைந்தகரை, எச்.டி.எப்.சி., வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வருபவர் திவ்யன் குமார், 34. அவர் சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் ஒன்றை அளித்து இருந்தார்.

அதில் அவர் கூறியிருந்ததாவது:

'அவன்ஸ் கன்சல்டிங் சர்வீஸ் என்ற நிறுவனத்தில், ஏகாம்பரம், கேசவ் கங்கராஜ், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் மென்பொருள் பொறியாளராக பணிபுரிந்து வருவதாக கூறி, போலியான சம்பள சான்றுகளை சமர்ப்பித்து, தனி நபர் கடனாக 1.40 கோடி ரூபாய் பெற்றனர்.

வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தாமல் ஏமாற்றி வருகின்றனர். இவர்களுக்கு, ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த குமார் என்பவர், போலியாக சம்பள சான்றிதழை தயாரித்து கொடுத்து, வங்கியில் இருந்து பெற்ற கடனில் கமிஷன் தொகை வாங்கி உள்ளார்.

எனவே, போலி ஆவணம் வாயிலாக தனி நபர் கடன் வாங்கி, திரும்ப செலுத்தாமல் ஏமாற்றி வருவோர் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு புகாரில் குறிப்பிட்டு இருந்தார்.

புகாரின் அடிப்படையில் வங்கி மோசடி புலனாய்வு பிரிவு போலீசார், வழக்கு பதிவு செய்தனர். விசாரணையில், ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த குமார், 29, ஏகாம்பரம், 27, கேசவ் கங்கராஜ், 25, கிருஷ்ணமூர்த்தி, 24 ஆகிய நான்கு பேரும் மோசடியில் ஈடுபட்டது உறுதியானது.

மேலும், நான்கு பேரும் இதே போல் ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி உள்ளிட்ட பல்வேறு நிதி நிறுவனங்களில் கடன் பெற்று, 2.47 கோடி ரூபாய் வரை மோசடி செய்தது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து, நான்கு பேரையும் வங்கி மோசடி புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்தனர்.

Advertisement