விசைப்படகு இயக்க தெரியவில்லை: பயிற்சி மையங்களை அதிகரிக்க வேண்டும் மீனவர்கள் வலியுறுத்தல்

சென்னை: 'விசைப்படகு ஓட்டுநர் பயிற்சி மையங்கள் குறைவாக இருப்பதால், மீனவர்கள் அதிகம் பேர் பயிற்சி பெற முடியவில்லை. எனவே, ஓட்டுநர் பயிற்சி மையங்களை அதிகரிக்க வேண்டும்' என, மீனவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

கடந்த 2020ல் தமிழ்நாடு மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தின்படி, விசைப்படகு இயக்க, ஓட்டுநர் உரிமம் கட்டாயம் ஆக்கப்பட்டது. இதை பெற, விசைப்படகு ஓட்டுநர் பயிற்சி கண்டிப்பாக பெற வேண்டும். அரசு சார்பில் தற்போது ராமநாதபுரம், துாத்துக்குடி, கன்னியாகுமரி, நாகப்பட்டினம், சென்னை ஆகிய இடங்களில், ஓட்டுநர் பயிற்சி அளிக்கப்படுகிறது.

'சங்கல்ப்' திட்டம்



பயிற்சி காலம் ஒரு வாரம். பயிற்சி முடித்த, 18 வயதுக்கு மேற்பட்டோர், அந்தந்த மாவட்ட மீன்வளத்துறை அலுவலகத்தில், விசைப்படகு ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பிக்க வேண்டும். அதன்பின் உரிமம் வழங்கப்படும்.

புதிதாக, விசைப்படகு ஓட்டுநர் உரிமம் பெற, படகின் அளவை பொறுத்து, 3,000 ரூபாய் முதல் 5,000 ரூபாய் வரை, கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கட்டணத் தொகை அதிகமாக இருப்பதால், விசைப்படகு ஓட்டுநர் உரிமம் பெற, மீனவர்கள் ஆர்வம் காட்டவில்லை.

ஓட்டுநர் பயிற்சியாளர்கள் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள், கட்டணத்தை குறைக்கும்படி, தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து, ஓட்டுநர் பயிற்சி, உணவு, ஓட்டுநர் உரிமக்கட்டணம் ஆகியவற்றை சேர்த்து, ஒரு நபருக்கு 13,190 ரூபாயை அரசு வழங்கும் என, தமிழக அரசு கடந்த ஜனவரியில் அறிவித்தது. அதைத் தொடர்ந்து, மத்திய அரசின் 'சங்கல்ப்' திட்டத்தின் கீழ் 150 பேர், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் கீழ் 50 பேர் என இதுவரை, 200 பேர் பயிற்சி முடித்து, விசைப்படகு ஓட்டுநர் உரிமம் பெற்றுஉள்ளனர்.

விழிப்புணர்வு



இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், 'விசைப்படகு ஓட்ட, ஓட்டுநர் உரிமம் அவசியம் என்கின்றனர். மீனவர்களிடம் இதுகுறித்த விழிப்புணர்வு இல்லை.

வெளியூர் சென்று பயிற்சி பெறுவது சிரமமாக உள்ளது. பயிற்சி பெற ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடிகிறது. நேரடியாக சேர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அனைவரும் எளிதாக உரிமம் பெற வசதியாக, ஓட்டுநர் பயிற்சி மையங்களை அதிகரிக்க வேண்டும். இதுகுறித்து மீனவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்' என்றனர்.

இது குறித்து, மீன்வளத்துறை மற்றும் ஓட்டுநர் பயிற்சி அதிகாரிகள் கூறியதாவது:

தமிழகத்தில், 5,120 பதிவு செய்யப்பட்ட விசைப்படகுகள் உள்ளன. இதுவரை, 200 பேர் ஓட்டுநர் உரிமம் பெற்றுள்ளனர். மீனவர்கள் ஓட்டுநர் உரிமம் பெற, ஆர்வம் காட்டுவதில்லை.

ஓட்டுநர் பயிற்சி பெறுவோருக்கு, கடல்வழி பயண விதிகள், இன்ஜின் சரிபார்ப்பு, விபத்து முன்னெச்சரிக்கை, பாதுகாப்பு உபகரணங்கள் பயன்பாடு உள்ளிட்ட பயிற்சிகளை வழங்குகிறோம்.

ஏற்கனவே படகு ஓட்ட தெரிந்திருந்தாலும், சட்டப்படி விசைப்படகு ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். மீனவர்களின் நலன் கருதி ஏற்படுத்தப்பட்ட திட்டத்தை, அவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement