திருவேற்காடிற்கு ரூ.510 கோடியில் பாதாள சாக்கடை திட்டம்; 22,397 வீடுகளுக்கு இணைப்பு கொடுக்க முடிவு

திருவேற்காடு:ஆவடி அடுத்த திருவேற்காடு நகராட்சியில், காலி மனை, நீர்நிலைகளில் கழிவுநீர் விடுவதை தடுக்க, 510 கோடி ரூபாயில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தால், 22,397 வீடுகளுக்கு இணைப்பு தரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னை புறநகர், ஆவடி அடுத்த திருவேற்காடு நகராட்சி, 28.50 சதுர கி.மீ., பரப்பளவு உடையது. 2023ல் சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.

நகராட்சியில், நுாம்பல், சுந்தரசோழபுரம், வீரராகவபுரம், அயனம்பாக்கம், பெருமாள் அகரம் மற்றும் கோலடி உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இதன் 18 வார்டுகளில் 1,414 தெருக்களில் 83,971 பேர் வசிக்கின்றனர்.

நகராட்சிக்கு 28,068 பேரிடம் பெறப்படும் சொத்து வரி வாயிலாக ஆண்டுதோறும் 20 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது.

சென்னை புறநகராக இருப்பதால், வளர்ச்சி அடைந்து வருகிறது. அடுக்குமாடி குடியிருப்புகள், பள்ளிகள், அலுவலகங்கள் என, புதிதாக பல கட்டடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

விரைவில், ஆவடி மாநகராட்சியுடன் திருவேற்காடு இணைக்கப்பட உள்ளது. ஆனால், அடிப்படை தேவையான பாதாள சாக்கடை திட்டம் இல்லை.

இதனால், குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், நீர்நிலைகள் மற்றும் காலி மனைகளில் வெளியேற்றுவதால், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.

குறிப்பாக, வீடுகளில் இருந்து லாரிகள் வாயிலாக எடுக்கப்படும் கழிவுநீர், இரவோடு இரவாக கூவம் ஆற்றில் விடப்படுகிறது.

இதனால், கொசு உற்பத்தி அதிகரித்து, கொசுக்கடியால் சிறுவர்கள் முதல் பெரியோர் வரை பலரும் பாதிக்கப்படுகின்றனர்.

எனவே, திருவேற்காடு நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்த வேண்டும் என, பகுதிவாசிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதையடுத்து, நகராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்கல் துறை மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு சேவைகள் நிறுவனம் சார்பில், 510.63 கோடி ரூபாய் மதிப்பில், பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்த திட்டமிட்டு உள்ளது.

இதில், 18.62 சதுர கி.மீ., பரப்பளவில், 193.76 கி.மீ., நீளத்திற்கு குழாய் புதைக்கப்பட்டு 22,397 வீடுகளுக்கு பாதாள சாக்கடை இணைப்பு கொடுக்கப்பட உள்ளது.

இதற்காக, திருவேற்காடு நகராட்சியை 11 மண்டலங்களாக பிரித்து 11 நீரேற்று நிலையம், 16 கழிவுநீர் உந்து நிலையம் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட உள்ளது.

நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது :

பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டத்தில் பெறப்பட்ட கருத்துக்கள், அரசிடம் தெரிவிக்கப்படும். அரசு எடுக்கும் முடிவை பொறுத்து, இத்திட்டம் மூன்று ஆண்டுகளில் செயல்படுத்தப்படும்.

இத்திட்டம் வாயிலாக, திருவேற்காடு மக்களின் நீண்டநாள் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்.

இதில், கோலடி பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான 44 சென்ட் நிலம் உள்ளது. அங்கு, 33 சென்ட் நிலத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட உள்ளது.

இதில், எஸ்.பி.ஆர்., எனும் சீக்கியூன்சிங் பேட்ச் ரியாக்டர் எனும் அதிநவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளது.

இதன் வாயிலாக, தினமும் 20.08 கோடி லிட்டர் கழிவுநீரை முழுதாக சுத்திகரிப்பு செய்து, அயனம்பாக்கம் ஏரியில் வெளியேற்றப்படும்.

இதனால், அயனம்பாக்கம் ஏரியைச் சுற்றி 6 கி.மீ., சுற்று வட்டாரத்தில் நீர்மட்டம் 10 அடியாக உயரம். அடுத்த 50 ஆண்டுகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது. இத்திட்டம் முடிந்தபின், அயனம்பாக்கம் ஏரி பசுமை பூங்கா மாற்றவும் வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






பாதாள சாக்கடைதிட்ட பணி



விபரம்-ரூ.510.63 கோடிதிட்ட மதிப்பீடு-18.62 சதுர கி.மீ.


மொத்தம் பரப்பளவு-193.76 கி.மீ.குழாய் நீளம்-22,397மொத்த இணைப்பு-11கழிவு நீரேற்று நிலையம்-16கழிவுநீர் உந்து நிலையம்-



பொதுமக்கள் எதிர்ப்பு




பாதாள சாக்கடை திட்டம் குறித்து பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் கடந்த 11ம் தேதி, திருவேற்காடில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்தது.இதில், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சியினர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.


நகராட்சி செயற்பொறியாளர் விஜயபாஸ்கர், பாதாள சாக்கடை திட்டம் செயல்படும் விதம் குறித்து விவரித்தார்.அப்போது, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட உள்ள கோலடி பகுதியில் விளையாட்டு மைதானம் உள்ளது. அதன் அருகிலேயே அரசு பள்ளிக்கூடம், சர்ச் மற்றும் பட்டியலின மக்களின் குடியிருப்புகள் உள்ளன.அங்கு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்தால், கோலடி மற்றும் அயனம்பாக்கம் ஏரிகளின் நிலத்தடி நீர் மாசடையும்.


எனவே, கோலடி பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கக்கூடாது என, பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.மேலும், மின்வாரிய அலுவலகம் அமைந்துள்ள பகுதியில், அரசுக்கு சொந்தமான இடத்தில் இத்திட்டத்தை செயல்படுத்தலாம் எனவும் கருத்து தெரிவித்தனர்.

Advertisement