மீனவர்கள் பிரச்னை தீர நான் முதல்வராக வேண்டும்: சீமான்
ராமேஸ்வரம்: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அளித்த பேட்டி:
இலங்கையில் தமிழக மீனவர்களை சங்கிலியில் பிணைத்து அழைத்துச் செல்வது வேதனையாக உள்ளது. கேரள மீனவர்கள் பாதித்தால், அம்மாநில முதல்வர் களத்தில் இறங்கி போராடுகிறார்.
ஆனால், முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் மட்டும் எழுதுகிறார். விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருந்தவரை, தமிழக மீனவர்களுக்கு கடலில் எவ்வித பாதிப்பும் இல்லை. இலங்கை அரசு அஞ்சிக் கொண்டிருந்தது.
அப்படியொரு நிலை மீண்டும் வர வேண்டும் என்றால், இன்னொரு பிரபாகரனாக இருக்கும் நான், தமிழக முதல்வர் ஆக வேண்டும்.
இலங்கையில் சீனா வலுவாக கால் பதித்துள்ளது. அம்பன்தோட்டா துறைமுகத்தை 99 ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்துள்ளனர். இது நம் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது.
எனவே, பிரதமர் மோடி கச்சத்தீவை மீட்டு, இலங்கையுடன் பேச்சு நடத்தி, நம் நாட்டு மீனவர்களை காக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.