பல்லாங்குழி சாலை சீரமைப்பு எப்போது?

பல்லடம் : பல்லடம் அடுத்த அருள்புரம் உப்பிலிபாளையத்தில் இருந்து சேடபாளையம் செல்லும் ரோட்டுக்கு இணைப்புச்சாலை உள்ளது. இந்த வழித்தடத்தில், ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட சேகாம்பாளையம் குக்கிராமம் இடம்பெற்றுள்ளது. இங்குள்ள இணைப்புச் சாலை சேதமடைந்து கரடு முரடாக காணப்படுகிறது. கரைப்புதுார் - ஆறுமுத்தாம்பாளையம் என, இரு ஊராட்சிகளின் எல்லை பகுதியாக இது உள்ளதால், இந்த இணைப்புச் சாலையை யார் சீரமைப்பது என்பதில் சிக்கல் நீடித்து வருகிறது.
பொதுமக்கள் கூறுகையில், 'இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கும் அரசு துவக்க, நடுநிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் உப்பிலிபாளையம் மற்றும் சேகம்பாளையத்தில் உள்ளன. பள்ளி செல்லும் மாணவ, மாணவியர், பனியன் தொழிலாளர்கள் பலர் இச்சாலையை அதிகளவு பயன்படுத்துகின்றனர். கடந்த ஐந்து ஆண்டுகள் முன், பல்வேறு போராட்டங்களுக்கு பின் சீரமைக்கப்பட்ட இந்த ரோடு, மழையில் கரைந்து, ஜல்லிகள் பெயர்ந்து கரடுமுரடாக உள்ளது. சாலையை உடனடியாக புதுப்பிக்க வேண்டும்'' என்றனர்.