மீன்கள் வரத்து குறைந்ததால் விலை உயர்வு

கடலுார் : கடலுாரில் கடல் மீன்கள் வரத்து குறைந்ததால், விலை உயர்ந்தது.
கடலுார் பகுதியைச் சேர்ந்த தேவனாம்பட்டினம், அக்கரைகோரி, சோனாங்குப்பம், சிங்காரத்தோப்பு உள்ளிட்ட பல்வேறு மீனவ கிராமத்தினர் பைபர் மற்றும் விசைப் படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்க செல்கின்றனர்.
பிடித்து வரும் மீன்களை முதுநகர் துறைமுகத்தில் வைத்து விற்பனை செய்யப்படுகிறது. விடுமுறை நாளான நேற்று துறைமுகத்தில் மீன்கள் வாங்க மக்கள் அதிகளவில் குவிந்தனர்.
வெயில் காலம் துவங்கியுள்ளதால் கடலில் காற்று வேகம் குறைந்து நீரோட்டம் மாற்றம் ஏற்பட்டுள்ளதால் மீன்கள் வரத்து குறைந்துள்ளது. கடலில் இருந்து மீன் பிடித்து வரும் அளவு குறைந்துள்ளதால், மீன்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
ஒரு கிலோ 750க்கு விற்கப்பட்ட வஞ்சிரம் மீன், 950 ரூபாய்க்கு விற்பனையானது. வெள்ளை வவ்வால் கிலோ 1,200, சங்கரா 450, பெரிய அளவு இறால் 800 ரூபாய் என, அனைத்து ரக மீன்களும் ரூ.150 முதல் ரூ.200 வரை விலை உயர்ந்து காணப்பட்டது.