அமைச்சர் பதவியில் தொடர விரும்புகிறாரா செந்தில் பாலாஜி? பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட் 10 நாள் கெடு
புதுடில்லி,: 'அமைச்சராக தொடர விரும்புகிறாரா என்ற கேள்விக்கு, 10 நாட்களுக்குள் செந்தில் பாலாஜி பதில் அளிக்க வேண்டும்' என உச்ச நீதிமன்றம் கெடு விதித்துள்ளது.
அ.தி.மு.க., ஆட்சிக் காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. அப்போது, போக்குவரத்து கழகங்களில் ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட முக்கிய பணியிடங்களுக்கு ஆட்களை நியமிக்க, பலரிடம் லஞ்சம் பெற்றதாக புகார்கள் எழுந்தன.
இவை தொடர்பாக, சென்னை போலீசின் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
சிறை
அத்துடன், லஞ்சப் பணம் வாயிலாக, சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக, செந்தில் பாலாஜி மீது அமலாக்கத் துறையும் வழக்குப்பதிவு செய்தது.
வழக்கு தொடர்பாக, 2023ல் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில், விசாரணை நீதிமன்றம் மற்றும் சென்னை உயர் நீதிமன்றம் ஜாமின் வழங்க மறுத்தது.
இதையடுத்து, உச்ச நீதிமன்றம் சென்று ஜாமின் கோரினார் செந்தில் பாலாஜி. மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், கடந்த செப்., 26ல் அவருக்கு ஜாமின் வழங்கியது. அதன் தொடர்ச்சியாக, மீண்டும் அமைச்சரானார் செந்தில் பாலாஜி.
இந்நிலையில், 'செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கின் விசாரணை நடந்து வருகிறது. அவர் மீண்டும் அமைச்சராக பொறுப்பேற்றதை அடுத்து, வழக்கின் விசாரணை தடுக்கப்படும்.
'வழக்கில் சாட்சிகளாக இருப்போரில் பெரும்பாலானவர்கள் அரசு ஊழியர்கள் என்பதால், அமைச்சருக்கு எதிராக அவர்கள் சாட்சி சொல்ல அச்சப்படுகின்றனர். எனவே, செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்ய வேண்டும்' என, வித்யா குமார் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி அமலாக்கத்துறை சார்பாகவும் தனியாக மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுக்கள் மீதான விசாரணை, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி அபயா எஸ்.ஓகா தலைமையிலான அமர்வில் நடைபெற்று வருகிறது.
விசாரணை
கடந்த முறை வழக்கு விசாரணைக்கு வந்த போது, 'செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர விரும்புகிறாரா அல்லது ஜாமினுக்கு எதிரான வழக்குகளில் விரைவாக விசாரணை நடத்தட்டுமா' என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இந்நிலையில், இந்த வழக்கு நேற்று உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, செந்தில் பாலாஜி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கியிடம், 'என்ன முடிவு எடுத்துள்ளீர்கள்' என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு, ''தற்போது செந்தில் பாலாஜி என்ன நிலையில் இருக்கிறாரோ, அதே நிலையில் தொடர விரும்புகிறார்,'' என்று அவர் பதிலளித்தார். 'அப்படியானால், வாதங்களை முன் வையுங்கள்' என, நீதிபதிகள் கேட்டுக் கொண்டனர்.
''இந்த விவகாரத்தை பொறுத்தவரை, செந்தில் பாலாஜி அமைச்சராக பதவி ஏற்கக்கூடாது என குறிப்பிட்ட உத்தரவு இல்லை.
''இது தொடர்பாக விரிவான பதில் மனு தாக்கல் செய்கிறோம். அதற்கு அவகாசம் வழங்குங்கள். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக, எங்களுக்கு நோட்டீஸ் எதுவும் பிறப்பிக்கப்படவில்லை. எனவே, வழக்கின் விசாரணையை ஒத்தி வைக்க வேண்டும்,'' என, முகுல் ரோஹத்கி கூறினார்.
இதனால், கோபமடைந்த நீதிபதிகள் கூறியதாவது:
மூத்த வழக்கறிஞரான நீங்கள் தான், ஆரம்பத்தில் இருந்தே இவ்வழக்கில் செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜராகி வருகிறீர்கள். இந்த வழக்கு, சிறப்பு அமர்வு வழக்காக பட்டியலிடப்பட்டு உள்ளது.
நியாயமற்றது
அப்படி இருக்கும் போது, ஏதேதோ காரணம் சொல்லி வழக்கின் விசாரணையை ஒத்தி வைக்க கோருவது, விசாரணையை வேண்டும் என்றே தாமதப்படுத்துவதாகவே தோன்றுகிறது. இது, மிகவும் துரதிருஷ்டவசமானது; நியாயமற்றது.
இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.
இதையடுத்து, தான் தெரிவித்த வார்த்தைகளை திரும்ப பெற்றுக்கொள்ள செந்தில் பாலாஜி தரப்பு மூத்த வழக்கறிஞர் கோரிக்கை வைத்தார்.
அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், 'மூத்த வழக்கறிஞர் தெரிவித்த அத்தனை வார்த்தைகளும் எங்கள் உத்தரவில் பதிவு செய்யப்படும்' என, திட்டவட்டமாக தெரிவித்தனர்.
மேலும், வழக்கின் விசாரணையை ஒத்தி வைப்பதாகவும், அதற்குள் இது தொடர்பான விபரங்களை தாக்கல் செய்யும்படியும் உத்தரவிட்டனர்.
வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 14ம் தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று செந்தில் பாலாஜி தரப்பு கேட்டபோது, 'நீங்கள் சொல்லும் தேதியில் ஒத்திவைக்க முடியாது' என்று கூறி, அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர விரும்புகிறாரா என்ற கேள்விக்கு, 10 நாட்களுக்குள் அவர் பதில் அளிக்கும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
