ஏ.ஐ., நம்ம வேலையில் அதிக பாதிப்பை ஏற்படுத்தாது

6


புதுடில்லி: 'இந்திய வேலை வாய்ப்புகளில் ஏ.ஐ., குறைவான தாக்கத்தையே ஏற்படுத்தும். பெரிய அச்சுறுத்தல் இல்லை' என மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர் எஸ்.கிருஷ்ணன் கூறினார்.

இது குறித்து எஸ்.கிருஷ்ணன் கூறியதாவது:
இந்தியாவில் அமைப்பு சார்ந்த தொழில்துறைகளில் வேலைவாய்ப்பை பொறுத்தவரை செயற்கை நுண்ணறிவால் எந்த பாதிப்பும் இல்லை. அச்சுறுத்தல் எதுவும் கிடையாது. இதற்கு காரணம் செயற்கை நுண்ணறிவால் ஆபத்து ஏற்படக்கூடிய அதிகாரிகள் பணியிடங்கள் இந்தியாவில் வெகு குறைவு. ஆனால் முன்னேறிய நாடுகளில் அத்தகைய பணியிடங்கள் அதிகம்.



தற்போதைய செயற்கை நுண்ணறிவு மாடல்கள் பெரும்பாலும், திரும்பத் திரும்ப செய்யக்கூடிய வேலைகளுக்கு மாற்றாக தயார் செய்யப்பட்டுள்ளவை. இவற்றின் மூலம், உற்பத்தித்திறனை மேம்படுத்த முடியும். இந்தியா சார்ந்த மொபைல் போன் OS உருவாக்கப்படுவதைப் பற்றி நாம் பேசும்போது, ​​மொபைல் போனுக்கான சிப்பும் மிக முக்கியமானதாக இருக்கும். இந்த மறுசீரமைப்புத் துறையில் நாங்கள் கூட்டாக இணைந்து செயல்படுகிறோம்.


மேலும் இது இந்தியா செமி கண்டக்டர் மிஷன் உள்ளிட்டவை சிறப்பாக செயல்பட வழி வகுக்கும். சைபர் பாதுகாப்பு என்பது மிகவும் முக்கியமான அங்கம் வகிக்கிறது. சென்சார் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை ஒருங்கிணைப்பு மூலம் உற்பத்தி மற்றும் விவசாயம் போன்ற துறைகளில், செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.,) உற்பத்தி திறனை அதிகரிக்க வழிவகுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement