மாணவர்கள் எம்புரான் படம் முதல் ஷோ பார்க்கணும்: ரிலீஸ் நாளில் விடுமுறை விட்ட கல்லூரி

4

பெங்களூரு: மோகன்லால் நடித்த எம்புரான் படத்தின் முதல் காட்சிக்காக பெங்களுருவில் ஒரு கல்லூரி விடுமுறை அறிவித்துள்ளது.



நடிகர் மோகன்லால் நடிப்பில், பிரித்விராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ளது எம்புரான் படம். மெகா ஹிட்டான லூசிபர் படத்தின் 2ம் பாகமாக இந்த படம் மார்ச் 27ல் உலகம் முழுவதும் வெளியாகிறது.


டிக்கெட் முன் பதிவில் எம்புரான் படம் கிட்டத்தட்ட 60 கோடி ரூபாயை கடந்துவிட்டது. இந் நிலையில் பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகரில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரி ஒன்று படம் வெளியாகும் மார்ச் 27ம் தேதியன்று விடுமுறை அறிவித்துள்ளது.


கல்லூரியில் உள்ள மாணவர்கள், ஊழியர்களுக்காக படத்தின் பிரத்யேக காட்சிக்கு திரையரங்கின் 2 காட்சிகளை நிர்வாகம் முன் பதிவு செய்திருக்கிறது. இந்த அறிவிப்பை கல்லூரி நிர்வாகம் சமூக வலைதளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.



இது குறித்து கல்லூரியின் நிர்வாக இயக்குநர் கூறியதாவது: எங்கள் கல்லூரியில் மார்ச் 26ம் தேதி பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள மாணவர்களும், அவர்களின் பெற்றோர்களும் வர உள்ளனர். வழக்கமாக இதுபோன்ற விழாக்களுக்கு அடுத்த நாள் விடுமுறை விடப்படும்.


அதுபோல, எங்களை அணுகிய மாணவர்கள், மார்ச் 27ம் தேதி சினிமாவுக்கு போகலாமா என்று கேட்டனர். அதை கொண்டாட சினிமாவுக்கு செல்லலாம் என்று முடிவெடுத்து, அன்றைய தினம் 2 காட்சிகளை முன்பதிவு செய்துள்ளோம்.


நாங்கள் அனைவரும் ஒரு குடும்பம் போல இருக்கிறோம். மாணவர்கள், அவர்களின் பெற்றோர்கள், கல்லூரி பணியாளர்கள், உள்ளூர் மக்கள் சிலர் என பலரும் எங்களுடன் அன்றைய தினம் படம் பார்க்க உள்ளனர்.


இதுபோன்ற கல்லூரி வாழ்க்கையை இனிமையான நிகழ்வுகளுடன் நகர்த்தினால் போதை போன்ற கெட்ட பழக்கங்களில் இருந்து அவர்கள் தள்ளியே இருக்க வாய்ப்பாக அமையும்.


இன்னும் சொல்ல போனால் நான் நடிகர் மோகன்லாலின் தீவிர விசிறி. விடுமுறை விட அதுவும் ஒரு காரணம். கேரளாவைச் சேர்ந்தவர்களுக்கு அங்கு பிறந்தவர்களுக்கு எனது உணர்வுகள் புரியும்.


இவ்வாறு அவர் கூறினார்.


எம்புரான் படத்துக்காக மொத்தம் 2 காட்சிகளாக 430 டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டு உள்ளன. இதற்காக ஆன செலவு மட்டும் ரூ.1.4 லட்சம் ஆகும்.

Advertisement