இஷான் கிஷான் முதல் சதம்


ஐதராபாத்: பிரிமியர் போட்டியில் அசத்திய இஷான் கிஷன், 45 பந்தில் சதம் விளாசினார். இவரது அதிரடி கைகொடுக்க, ஐதராபாத் அணி 44 ரன் வித்தியாசத்தில் வென்றது.

ஐதராபாத்தில் நடந்த பிரிமியர் லீக் போட்டியில் ஐதராபாத், ராஜஸ்தான் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற ராஜஸ்தான் கேப்டன் ரியான் பராக், 'பவுலிங்' தேர்வு செய்து அதிர்ச்சி கொடுத்தார்.

ஐதராபாத் அணிக்கு டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா கலக்கல் துவக்கம் தந்தனர். தீக் ஷனா 'சுழலில்' அபிஷேக் (24) வீழ்ந்தார். ஆர்ச்சர் ஓவரில் ஹெட் 4 பவுண்டரி, ஒரு சிக்சர் விளாச, 23 ரன் எடுக்கப்பட்டன.
சோகம் கடந்து சதம்: மூன்றாவது வீரராக வந்த இஷான் கிஷன், சோகங்களை கடந்து சாதித்தார். பீஹாரை சேர்ந்த கீப்பர்-பேட்டரான இவர், ஒரு காலத்தில் இந்திய அணியின் நட்சத்திரமாக இருந்தார். உள்ளூர் ரஞ்சி போட்டியை புறக்கணித்ததால், பி.சி.சி.ஐ., சம்பள ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டார். மும்பை அணியும் தக்க வைக்கவில்லை. பின் ஏலத்தில் இவரை ரூ. 11.25 கோடிக்கு ஐதராபாத் அணி வாங்கியது. இதற்கு நன்றி செலுத்தும் விதமாக, நேற்று வெளுத்து வாங்கினார். ஹெட், 67 ரன்னுக்கு (9x4, 3x6) அவுட்டானார். பிரிமியர் அரங்கில் அதிவேகமாக 200 ரன்னை (14.1 ஓவர்) ஐதராபாத் எட்டியது. நிதிஷ் குமார் 30, கிளாசன் 34, ரன் எடுத்தனர். இஷான், 45 பந்தில் சதம் எட்டினார். இது, பிரிமியர் அரங்கில் இவரது முதல் சதம். இத்தொடரின் முதல் சதம். ஐதராபாத் அணி 20 ஓவரில் 286/6 ரன் குவித்தது. இஷான் (106, 11x4, 6x6) அவுட்டாகாமல் இருந்தார்.


சாம்சன் ஆறுதல்: இமாலய இலக்கை விரட்டிய ராஜஸ்தான் அணிக்கு ஜெய்ஸ்வால் (1), கேப்டன் பராக் (4), நிதிஷ் ராணா (11) ஏமாற்றினர். 26 பந்தில் அரைசதம் எட்டிய சாம்சன், 66 ரன்னுக்கு அவுட்டானார். ஜாம்பா வலையில் துருவ் ஜுரல் (70) சிக்கினார். ஹெட்மெயர் (42), சுபம் துபே (34*) சற்று போராடினர். ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 242/6 ரன் மட்டும் எடுத்து தோல்வி அடைந்தது.

'மெகா' ஸ்கோர்
பிரிமியர் அரங்கில் ஐதராபாத் அணி இரண்டாவது அதிகபட்ச ஸ்கோரை (286/6) நேற்று பதிவு செய்தது. முதலிடத்திலும் ஐதராபாத் தான் (287/3, எதிர், பெங்களூரு, 2024, பெங்களூரு) உள்ளது.

'ரன் வள்ளல்' ஆர்ச்சர்
பவுலிங்கில் சொதப்பிய ராஜஸ்தானின் ஆர்ச்சர் (4 ஓவர், 0/76 ரன்), பிரிமியர் அரங்கில் ஒரு இன்னிங்சில் அதிக ரன் வழங்கிய பவுலரானார். இரண்டாவது இடத்தில் மோகித் சர்மா (குஜராத், 0/73, எதிர், டில்லி, 2024, டில்லி) உள்ளார்.

5000 ரன்
நேற்று 84 ரன் எடுத்த போது, 'டி-20' அரங்கில் 5,000 ரன் (193 போட்டி) எட்டினார் இஷான் கிஷன். பிரிமியர் அரங்கில் 2,750 ரன் (100 இன்னிங்ஸ்) எடுத்துள்ளார்.
* 'டி-20' அரங்கில் டிராவிஸ் ஹெட் 4,000 ரன் (147 போட்டி) கடந்தார்.
* பிரிமியர் அரங்கில் 1000 ரன் (36 போட்டி) எட்டினார் கிளாசன்.

528 ரன்
ஐதராபாத் (286/6), ராஜஸ்தான் (242/6) விளாச, மொத்தம் 528 ரன் எடுக்கப்பட்டன. இது பிரிமியர் அரங்கில் ஒரு போட்டியில் எடுத்த இரண்டாவது அதிகபட்ச ரன். இதற்கு முன் 549 ரன் (ஐதராபாத்-287/3, பெங்களூரு-262/7, 2024, பெங்களூரு) எடுக்கப்பட்டன.

Advertisement