சிறுபான்மை இன மக்களுக்கு தி.மு.க., என்ன செய்தது: அண்ணாமலை கேள்வி

15

சென்னை: ''சிறுபான்மையின மக்களுக்கு தி.மு.க., என்ன செய்தது என கேட்டுப் பாருங்கள்,'' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.


இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் அண்ணாமலை பேசியதாவது: உங்களோடு, நாங்களும் இப்தார் நோன்பில் பங்கேற்பதை கடவுள் கொடுத்த வரப்பிரசாதமாக கருதுகிறோம். நம்முடைய கொள்கை என்ன என்பது குறித்து தமிழிசை சிறப்பாக பேசி உள்ளார். நாங்கள் தனித்தனியே பேசுவதை விட கூட்டணி கட்சி தலைவர்கள் பேசுவதை தான் நான் மிகப்பெரிய பாக்கியமாக கருதுகிறேன்.


தலைவர்கள் அனைவரும் தே.ஜ., கூட்டணியில் பிரதமர் மோடி தலைமையை ஏற்று பயணம் செய்கின்றனர். எல்லா கட்சியிலும் சிறுபான்மை தலைவர்கள், தொண்டர்கள் உள்ளனர். சிறுபான்மை இன மக்களுக்காக மேடையி்ல் இருக்கும் தலைவர்கள் உழைக்கின்றனர். நாங்கள் சிறுபான்மை இன மக்களுக்கு என்ன செய்தோம் என்பதை பா.ஜ., தலைவர்கள் ஆதாரப்பூர்வமாக சொல்ல முடியும். ஆனால், அவர்களுக்கு நாம் எதிரி என சொல்லக்கூடிய தி.மு.க.,விடம் சிறுபான்மை இன மக்களுக்கு என்ன செய்தீர்கள் என கேட்டுப்பாருங்கள்.தி.மு.க., மற்றும் முதல்வர் ஸ்டாலின் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் மட்டும் சிறுபான்மை இன மக்கள் பக்கத்தில் அமர்ந்து உங்கள் பாதுகாவலனாக பேசுவார்கள்.நான்கு ஆண்டு ஆட்சியில் எந்த விதமுமான விஷயமும் இருக்காது.



பட்டியல்





*சிறுபான்மை இன மக்கள் அதிகம் வாழும் மாவட்டத்தில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் சராசரியாக 31 சதவீத வீடுகள் சிறுபான்மை இன மக்களுக்கு சென்று கொண்டு உள்ளது. இதை ஆதாரப்பூர்வமாக சொல்ல முடியும்.

*பிரதமரின் முத்ரா கடன் திட்டத்தில் 32 லட்சம் கோடி ரூபாய் மக்களுக்கு கடனாக கொடுக்கப்பட்டு உள்ளது. 36 சதவீத சிறுபான்மை இன மக்கள் பயனடைந்துள்ளனர்.

*விவசாயிகள் நிதியுதவி திட்டத்தில் 33 சதவீதம் சிறுபான்மை இன மக்கள்

*உஜ்வாலா திட்டத்தில் 37 சதவீதம் பயனடைந்து உள்ளனர்.

தே.ஜ., கூட்டணி சிறுபான்மை இன மக்களுக்கு எங்காவது எதிரியாக இருந்து இருக்கிறோமா? அப்படி நீங்கள் 10 நிமிடம் யோசித்துப் பார்த்தால் போதும். தே.ஜ., கூட்டணி தலைவர்கள் தவறு செய்திருக்கிறோமா? 10 ஆண்டுகளில் இந்தியாவில் எங்காவது தவறு நடந்துள்ளதா? அதற்கு பிரதமர் அல்லது தே.ஜ., கூட்டணி காரணமா என யோசித்து பாருங்கள்

பிரதமருக்கு விருது



பிரதமர் மோடிக்கு 20 நாடுகள் உயரிய விருது கொடுத்து உள்ளன. அதில் 7 முஸ்லிம் நாடுகள் பிரதமருக்கு உயரிய விருது வழங்கி உள்ளது.
சவுதி அரேபியா, ஆப்கன், பாலஸ்தீனம்,யுஏஇ,பஹ்ரைன், எகிப்து,குவைத் நாடுகள் தங்களின் உயரிய விருது கொடுத்து உள்ளன. அந்நாடுகள் பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கின்றன.

முழு நேர பணி



முதல்வர் ஸ்டாலின் கையில் வரைபடத்தை கொடுத்து, மணிப்பூரை தொட்டு காட்டினால் அரசியலை விட்டு போகிறேன். மணிப்பூர் எங்கு இருக்கிறது என தெரியாது. மணிப்பூரில் நடந்ததற்கு பிரதமர் மோடி தான் என்ன காரணம் என சொல்கின்றனர். காங்கிரஸ் ஆட்சியி்ல், ஆயுதப்படை சிறப்பு சட்டத்தை நீக்க வேண்டும் என பெண்கள் ஆடையில்லாமல் நடந்து சென்றனர். மணிப்பூரில் அமைதி திரும்பும்போது இரண்டு பிரிவினருக்கு இடையே நடந்த மோதல் ஏற்பட்டது. மாநில அரசு ராஜினாமா செய்து, கவர்னர் ஆட்சி வந்து நிலைமை கட்டுக்குள் வந்துள்ளது.

எங்கு நடந்தாலும் பா.ஜ., தே.ஜ., கூட்டணி மீதும் பழி போடுவது மட்டுமே முழு நேர பணியாக முதல்வர் வைத்து உள்ளார். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.




தெரியாது

தொடர்ந்து நிருபர்களை சந்தித்த அண்ணாமலையிடம் , அ.தி.மு.க., பொதுச் செயலர் இ.பி.எஸ்., டில்லி பயணம் குறித்தும், அமித்ஷாவை சந்திக்கிறாரா எனவும் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அண்ணாமலை அளித்த பதில்: உள்துறை அமைச்சரை யார் வேண்டும் என்றாலும் சந்திக்கலாம். இதுபற்றி எனக்கு எதுவும் தெரியாது. அரசியல் ரீதியாக முடிச்சு போட்டு கேள்விகேட்டால், பதில் சொல்லும் நிலைமையில் நான் இல்லை என்றார்.



நம்பாதீர்கள்



அண்ணாமலை கூறியதாவது: முதல்வர் பொறாமைப்படும் அளவுக்கு விழா நடந்தது. எங்கள் கட்சியி்ல் முஸ்லிம் சொந்தங்கள் உள்ளனர். அவர்கள் கட்சியை வழிநடத்துகின்றனர். நோன்பு திறப்பு விழாவை தி.மு.க., மட்டும்தான் நடத்த வேண்டும் என பட்டா போட்டு வைத்துள்ளார்களா.

சிறுபான்மையின மக்கள் பிரதமர் மோடி தலைமையை ஏற்று உள்ளனர். மோடி செய்த வேலையை பார்க்கின்றனர். இதனை பார்த்து முதல்வர் ஸ்டாலின் பொறாமைப்படுகிறார். தி.மு.க., கூட்டணியை வீழ்த்த வேண்டும் என நினைத்தால் தே.ஜ., கூட்டணிக்கு எந்த கட்சியும் வரலாம். தே.ஜ., கூட்டணி விரிவடைந்து வருகிறது.


தமிழக அரசியல் வரலாற்றில் மிக வித்தியாசமான தேர்தல் களம் இது. வலிமையான கட்சிகள் ஐந்து கூட்டணியாக உருவாகி உள்ளது.

திமுக கூட்டணி

அதிமுக கூட்டணி

பாஜ கூட்டணி

சீமான்

விஜய் கட்சி என ஐந்து முனைபோட்டி நிலவுகிறது. இதுபோன்று யாரும் பார்த்தது கிடையாது.
சீமான் ஒவ்வொரு முறையும் வாக்கு வங்கியை காட்டுகிறது. அடுத்த 8 மாதத்தில் ஐந்து முனை போட்டி நல்லதா. இது 3 முனை போட்டியாக மாறுமா என தெரியாது. தி.மு.க.,வை சிறுபான்மையினர் நம்பக்கூடாது. இஸ்லாமிய, கிறிஸ்தவ சமுதாயத்தை ஓட்டு வங்கியாக பயன்படுத்த முடியாது. அவர்கள் பா.ஜ.,வை நோக்கி வருகின்றனர். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

Advertisement