தார்ப்பாய் மூடாமல் பறக்கும் லாரிகள் செங்கை புறநகர் பகுதியில் அடாவடி

மறைமலை நகர்:செங்கல்பட்டு புறநகர் பகுதிகளை ஒட்டி சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலை, செங்கல்பட்டு -- காஞ்சிபுரம் சாலை, திருப்போரூர்- - செங்கல்பட்டு சாலை, மாமல்லபுரம் -- செங்கல்பட்டு நெடுஞ்சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகள் உள்ளன.

இந்த நெடுஞ்சாலைகளில் தினமும், பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.

இந்த சாலைகள், சுற்றியுள்ள பகுதிகளை செங்கல்பட்டு நகருடன் இணைக்கும் முக்கிய சாலைகளாக உள்ளன.

இச்சாலைகளில் செங்கல்பட்டு, சிங்கபெருமாள்கோவில், மறைமலை நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், கனரக வாகனங்கள், கிரஷர் லாரிகள் மற்றும் செம்மண் ஏற்றிச் செல்லும் லாரிகள், அதிக பாரம் ஏற்றிச் செல்கின்றன.

அப்போது, லாரிகளின் மேல் பகுதியில் தார்ப்பாய் மூடாமல் செல்வதால் செம்மண், எம்-சாண்ட் போன்றவை காற்றில் பறந்து, வாகன ஓட்டிகளின் கண்களில் விழுவதால், வாகன ஓட்டிகள் தடுமாறி வருகின்றனர். இந்த பிரச்னை தொடர்கதையாக உள்ளதால், வாகன ஓட்டிகளில் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். இதற்கு நிரந்தர தீர்வு காண, போக்குவரத்து போலீசார், வட்டார போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வலியுறுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:

திருப்போரூர் தாலுகா வளர்குன்றம் ஏரியில் இருந்து செம்மண் எடுக்கப்பட்டு, அனுமந்தபுரம் -- சிங்கபெருமாள்கோவில் வழியாக ஜி.எஸ்.டி., சாலை வழியாக பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

இந்த லாரிகள் தார்ப்பாய் மூடாமல் செல்வதால், மண் துகள்கள் காற்றி பறந்து, வாகன ஓட்டிகளின் கண்களை பதம் பார்க்கின்றன. ஜல்லி உள்ளிட்டவை ஏற்றிச் செல்லும் லோடு லாரிகளில் தார்ப்பாய் மூடாமல் செல்லும் போது, ஜல்லி சாலையில் கொட்டி, பின்னால் வரும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். எனவே இதுபோன்று செல்லும் வாகனங்கள் மீது, வட்டார போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். விதிமீறும் வாகனங்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement