கோவையில் தஞ்சம்; 32 ரவுடிகளுக்கு சிறை

கோவை: கோவை மாவட்ட போலீசார் நடத்திய சோதனையில், குற்ற வழக்கில் தொடர்புடைய, 32 ரவுடிகள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
கோவையில் செயல்படும் கல்லுாரிகளில் பல்வேறு மாவட்டங்கள், வெளி மாநிலங்களிலிருந்து ஏராளமான மாணவர்கள் படிக்கின்றனர். வெளியூர் மாணவர்கள், வாடகைக்கு அறை எடுத்து தங்கியுள்ளனர். அதே போல், கோவையில் வெளி மாவட்டங்கள், மாநிலங்களை சேர்ந்தவர்கள் தங்கி, பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிகின்றனர். இவ்வாறு கல்வி, பணிக்காக வருபவர்களுடன் அண்டை மாவட்டங்கள், மாநிலங்களில் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களும் கலந்து விடுகின்றனர்.
நன்னடத்தை
சில தினங்களுக்கு முன், சிறுமியரை கடத்தி விபசாரத்தில் ஈடுபடுத்திய வழக்கில், எட்டு ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த நபரை, கடலுார் திட்டக்குடியை சேர்ந்த தனிப்படை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர். இதனால், வெளிமாவட்டங்களில் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு, கோவையில் பதுங்கிய நபர்கள் குறித்து சோதனை செய்ய திட்டமிடப்பட்டது. மாவட்டம் முழுதும் இரு நாட்களாக தீவிர சோதனை நடத்தப்பட்டது.
நேற்று முன்தினம், 80 தாபாக்கள், ஹோட்டல்களில் நடத்தப்பட்ட சோதனையில், 350 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவர்களின் இருப்பிடம், அவர்கள் மீதுள்ள குற்றவழக்குகள் குறித்த விசாரணையில், 14 பேர் மீது குற்ற வழக்குகள் இருப்பது தெரிந்தது.
இரண்டாம் நாளாக நேற்று, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள ரவுடிகள் குறித்து சோதனை நடத்தப்பட்டது. 70க்கு மேற்பட்ட ரவுடிகள் அடையாளம் காணப்பட்டனர். அவர்களில், 44 பேர் மீது, ஆயுத வழக்கு, கஞ்சா, கொள்ளை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, 32 பேரை போலீசார் சிறையில் அடைத்தனர். மீதமுள்ள 12 பேர், நன்னடத்தை பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
தொடர் விசாரணை
எஸ்.பி., கார்த்திகேயன் கூறுகையில், ''பல மாவட்டங்களில் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டவர்கள், கோவையில் பதுங்கிக் கொள்கின்றனர். அவர்களை அடையாளம் கண்டு, நடவடிக்கை எடுக்கவே இந்த சோதனை நடத்தப்பட்டது. ''சோதனையின் முடிவில், 70 ரவுடிகள் அடையாளம் காணப்பட்டனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட தொடர் விசாரணைக்கு பின் சிறையில் அடைக்கப்பட்டனர்,'' என்றார்.



மேலும்
-
சிறுபான்மை இன மக்களுக்கு தி.மு.க., என்ன செய்தது: அண்ணாமலை கேள்வி
-
புறநகருக்கு மாறும் திஹார் ஜெயில்: டில்லி பட்ஜெட்டில் அறிவிப்பு
-
பிரிமியர் லீக்: டாஸ் வென்ற குஜராத் அணி 'பீல்டிங்'
-
சவுக்கு சங்கர் வீடு மீது தாக்குதல்: பின்னணியில் செல்வப்பெருந்தகை
-
10ம் வகுப்பு அரசு தேர்வு வினாத்தாள் கசிவு: தெலுங்கானாவில் 5 பேர் கைது
-
பாஸ்போர்ட்டை மறந்த விமானி: கிளம்பிய இடத்தில் மீண்டும் தரையிறங்கிய விமானம்