பராமரிப்பில்லாத நிலத்தடி பூங்கா நடைபாதை வியாபாரிகளுக்கு உதவுமா?

வண்ணாரப்பேட்டை:பழைய வண்ணாரப்பேட்டை, எம்.சி., சாலை, துலுக்கானத்தம்மன் கோவில் எதிரே, 3,600 சதுரடியில் குளம் இருந்தது. 40 ஆண்டுகளுக்கு முன், அருகில் இருந்த தீயணைப்பு நிலையத்திற்கு தேவையான தண்ணீர், இந்த குளத்தில் இருந்து எடுக்கப்பட்டு வந்தது. நாளடைவில் தீயணைப்பு நிலையம் தண்டையார்பேட்டைக்கு மாறியதால், குளம் பயன்பாடின்றி போனது. அப்பகுதிவாசிகள், குப்பை கொட்டும் இடமாக பயன்படுத்தி வந்தனர். இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டது.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் முன்வைத்த கோரிக்கையை அடுத்து, கடந்த 2005ல் குளத்தை சுத்தம் செய்து நிலத்தடி பூங்காவாக மாநகராட்சி மாற்றியது.

அதேநேரம், பூங்கா தரைமட்டத்துக்கு கீழே இருந்ததால் பெண்கள், குழந்தைகள், முதியோர் பயன்படுத்துவதற்கு தயங்கவே, சமூக விரோதிகளின் கூடாரமாக பூங்கா மாறியது.

மேலும், பூங்காவை ஒட்டியுள்ள நடைபாதையை, சிறுகடை வியாபாரிகள் ஆக்கிரமித்துள்ளனர். இதனால், பூங்கா இருப்பதே பெரும்பாலானோருக்கு தெரிவதில்லை.

எனவே நெரிசல் மிகுந்த எம்.சி., சாலையில், பயன்பாடின்றி உள்ள நிலத்தடி பூங்காவில் வணிக வளாகம் அமைத்து, நடைபாதை வியாபாரிகளுக்கு கடை அமைத்து தர மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.

Advertisement