மாவட்டத்தில் 1,620 பேருக்கு காசநோய் பாதிப்பு

திருப்பூர்: ''இன்று உலக காசநோய் தடுப்பு விழிப்புணர்வு தினம். திருப்பூர் மாவட்டத்தில், 1,620 பேர் காசநோயாளிகளாக கண்டறியப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்'' என்று திருப்பூர் மாவட்ட காசநோய் தடுப்புத்திட்ட அலுவலர் தீனதயாளன் கூறினார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: காசநோய், காற்று மூலம் பரவக்கூடிய தொற்றுநோய். ஒருருக்கு இரண்டு வாரத்துக்கு மேல் சளியுடன் கூடிய இருமல், மாலை நேரங்களில் தொடர்ந்து காய்ச்சல், பசி, துாக்கமின்மை, எடை குறைதல், இருமும் போது நெஞ்சுவலி ஆகியன ஆரம்ப கட்ட அறிகுறி. காசநோய் குணப்படுத்த கூடியது தான். அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, தாலுகா மருத்துவமனையில் இந்நோய் கண்டறிவதற்கான வசதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த, 2024 டிச., 7ம் தேதி, தமிழக அரசின், 100 நாள் காசநோய் ஓழிப்பு முகாம் திட்ட பணிகள் துவங்கியது. திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில், 24,923 பேரிடம் சளி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நோய் கண்டறியும் எக்ஸ்ரே வாகனம், 7,895 பேருக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டுள்ளது. இவர்களில், 588 பேருக்கு காசநோயாளிகளுக்கான சிகிச்சை துவங்கப்பட்டுள்ளது.

2025 பிப்., மாத நிலவரப்படி, திருப்பூர் மாவட்டத்தில், 1,620 பேர் காசநோயாளிகளாக கண்டறியப்பட்டு, அதற்கான மருந்து சாப்பிட்டு வருகின்றனர். இவர்களில், 1,515 பேர் முதல் நிலையிலும், 105 பேர் இரண்டாம் நிலையிலும் மருந்து சாப்பிட்டு வருகின்றனர். காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து உதவித்தொகை திட்டத்தின் கீழ், மாதம், 500 ரூபாய் வழங்கப்படுகிறது. மாத்திரை மூலம் குணமடைந்து விட வாய்ப்புள்ளதை, தெரிந்தும் காலம் கடத்தினால், அனுமதியாகி சிகிச்சை பெற வேண்டிய நிலை ஏற்படும். இவ்வாறு கூறினார்.

Advertisement