20 நிமிடங்களில் விற்று தீர்ந்தது ஐ.பி.எல்., டிக்கெட்

சென்னை, சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில், வரும் 28ம் தேதி, சென்னை சூப்பர் கிங்க்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதும், ஐ.பி.எல்., போட்டி நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் விற்பனை நேற்று காலை 10:15 மணிக்கு, இணையதளம் வாயிலாக துவங்கியது.

மொத்தம், 35,000 பேர் மட்டுமே அமரக்கூடிய சேப்பாக்கம் மைதானத்திற்கு, ஒரே நேரத்தில் மூன்று லட்சம் பேர் டிக்கெட்டுகளை பெற முயன்றனர். இதனால், இணையதள சர்வர் செயல்பாடு முடங்கியது.

இந்நிலையில், விற்பனை துவங்கிய 20 நிமிடங்களில், அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்த தகவல் வெளியானதால், ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

போலி டிக்கெட்டுகள்

டிக்கெட்டுகளை பெற்ற சிலர், தங்களிடம் டிக்கெட் உள்ளதாகவும், மற்ற தகவலுக்கு தொடர்பு கொள்ளலாம் என்ற செய்தியுடன் சமூக வலைதளங்களில் பகிர்கின்றனர். இதனால், பலர் 1,700 ரூபாய் டிக்கெட்டுகளை, 10,000 ரூபாய்; 7,500 ரூபாய் டிக்கெட்டை, 50,000 ரூபாய் வரை கொடுத்து பெறுவதாகவும் கூறப்படுகிறது.

கடந்த முறை நடந்த மும்பை - சென்னை அணிகளுக்கு இடையிலான போட்டியை காண, இவ்வாறான டிக்கெட்டுகளை பெற்று வந்தோர், அவை போலி என்று தெரிந்ததும் ஏமாற்றம் அடைந்தனர்.

Advertisement