பைக் மீது மின்சாரம் பாய்ந்து 3 பேர் உடல் கருகி பலி; ராஜஸ்தானில் சோகம்

4


ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் அறுந்து கிடந்த உயர்அழுத்த மின் ஒயரில் பைக் உரசியதால், மின்சாரம் தாக்கி 3 பேர் உடல்கருகி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

முண்டியாட் - கட்லு சாலையில் கின்சார் எனும் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பிதராம் தேவசி, கல்லுரம் தேவசி மற்றும் ஜெதராம் தேவசி ஆகிய 3 பேரும், நேற்று கட்லு கிராமத்திற்கு ஒரே பைக்கில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, சாலையில் உயர்மின் அழுத்த ஒயர் அறுந்து கிடந்துள்ளது.

அந்த ஒயர் அவர்கள் சென்ற பைக்கில் உரசியதும், மின்சாரம் பாய்ந்தது. இதனால், பைக்கில் தீப்பற்றி எரிந்தது. இதில், 3 பேரும் சம்பவ இடத்திலேயே பைக்குடன் எரிந்து சாம்பலாகினர்.

இதனை நேரில் பார்த்தவர்கள், மின்சாரத்துறையினருக்கும், போலீசாருக்கும் உடனடியாக தகவல் கொடுத்தனர். அதன்பேரில், மின்சாரம் உடனடியாக துண்டிக்கப்பட்டது.

மின்சார ஊழியர்களின் அலட்சியத்தால் பரிதாபமாக 3 பேர் உயிரிழந்து விட்டதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர். இதனிடையே, நாகவூர் எம்.பி., ஹனுமன் பெனிவால், உயிரிழந்தவரின் குடும்பங்களுக்கு தலா ரூ.15 லட்சம் இழப்பீட்டை அரசு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

Advertisement