அரை மணி நேர மழைக்கே தாக்கு பிடிக்காத ஓசூர்; தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதி

ஓசூர்: ஓசூர் மாநகராட்சியில், 90,000 குடியிருப்புகளுக்கு மேல் உள்ளன. ஆனால், சாலை, கழிவுநீர் கால்வாய், தெருவிளக்குகள், மழைநீர் வடிகால் போன்ற எந்த கட்டமைப்பு வசதிகளும் முறையாக இல்லை. மாநகராட்சிக்கு வரி கட்டி விட்டு, போதிய கட்டமைப்புகள் இல்லாமல், மக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர்.

ஓசூரில், சரியான மழைநீர் மற்றும் கழிவுநீர் வடிகால் இல்லாததால், சாலையில் மழைநீர் தேங்குவது வாடிக்கையாக உள்ளது. தாழ்வான குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுந்து விடுகிறது. அதை அகற்ற தேவையான தண்ணீர் உறிஞ்சும் வாகனங்கள், மாநகராட்சி நிர்வாகம் வசம் இல்லை. மரங்கள் சாய்ந்து விழுந்தால், வெட்டி அகற்ற உபகரணங்கள் இல்லை. ஓசூரில் நேற்று முன்தினம் மாலை, 6:30 முதல், 7:00 மணி வரை, அரை மணி நேரம், 35 மி.மீ., அளவிற்கு கனமழை கொட்டி தீர்த்தது. இந்த சிறிது நேர மழைக்கே, ஓசூர் நகரம் நேற்று முன்தினம் இரவில் துவங்கி, நேற்று மதியம் வரை தத்தளித்தது. குறிப்பாக, தர்கா ஏரி அருகே சர்வீஸ் சாலை, பஸ் ஸ்டாண்ட், ராயக்கோட்டை சாலை சந்திப்பு, பழைய நகராட்சி அலுவலகம், ராமநாயக்கன் ஏரிக்கரை சாலை, ராம்நகர் பள்ளம் உட்பட பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியது. பாகலுார் சாலையில் குண்டும், குழியுமான இடத்தில் தேங்கிய மழைநீரால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.

ஓசூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ், தேசிய நெடுஞ்சாலைத்துறையை வலியுறுத்திய நிலையில், மண் கொட்டி தற்காலிகமாக வாகனங்கள் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டன. அரை மணி நேரம் பெய்த மழைக்கே, ஓசூரில் தண்ணீர் வடிய நீண்ட நேரமானது. அதற்கு, சரியான மழைநீர் வடிகால் இல்லாதது மற்றும் சாக்கடை கால்வாயை துார்வாராமல் பிளாஸ்டிக் கழிவுகள் அடைத்துள்ளது போன்றவை தான் காரணம் என, மக்கள் மத்தியில் குற்றச்சாட்டு உள்ளது.

மாநகராட்சி நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலைத்துறை சுதாரித்து, நகரில் சாலையோரங்களில் மழைநீர் வடிகால் மற்றும் கழிவு நீர் கால்வாய் அமைத்து, சாலைகளில் நீர் தேங்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், பெரிய மழையில், ஓசூர் நகரமே தண்ணீரில் தத்தளிக்கும் என பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Advertisement