மருத்துவப் பயிற்சி மாணவி மீது பாலியல் தாக்குதல்; சட்டம் ஒழுங்கு சீரழிவின் உச்சம் என சீமான் காட்டம்

12


சென்னை: சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் மருத்துவப் பயிற்சி மாணவி மீது பாலியல் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது சட்டம்-ஒழுங்கு சீரழிவின் உச்சம் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.


அவரது அறிக்கை: சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் பணி முடித்து விடுதிக்குத் திரும்பிக்கொண்டிருந்த மருத்துவப் பயிற்சி மாணவி மீது பாலியல் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியையும், மிகுந்த மனவேதனையையும் அளிக்கிறது.
தி.மு.க., ஆட்சியில், அண்ணா பல்கலை வளாகம் முதல் அரசு மருத்துவக்கல்லூரி வளாகம் வரை பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவது வன்மையான கண்டனத்துக்குரியது.

பாதுகாப்பு

மேற்குவங்க தலைநகர் கோல்கட்டாவில் அரசு மருத்துவமனை வளாகத்திலேயே பெண் டாக்டர் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்ட நிகழ்வு நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்திய நிலையில், டாக்டர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டுமென்ற கோரிக்கையை முன் வைத்து நாடு தழுவிய அளவில் மிகப்பெரும் போராட்டமும் நடைபெற்றது. இறுதியில் உச்சநீதிமன்றம் தலையிட்டு டாக்டர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தது.


கொலை, கொள்ளை

ஆனால், அவற்றிலிருந்து தமிழகத்தை ஆளும் தி.மு.க., அரசு எவ்விதப் பாடமும் கற்காமல் உரியப் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்காத காரணத்தினாலேயே சென்னையில் பட்டப்பகலில் அரசு மருத்துவமனையிலேயே டாக்டர் மீது கத்தியால் குத்தி கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டது.

அது மட்டுமின்றி அண்ணா பல்கலை வளாகத்தில் மாணவி மீது பாலியல் தாக்குதலும் தொடுக்கப்பட்டது. தமிழகத்தில் கொலை, கொள்ளை, வழிப்பறி, பாலியல் வன்கொடுமைகள் உள்ளிட்ட கொடும் குற்றங்கள் நடைபெறாத நாட்களே இல்லை என்ற அளவிற்கு திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு முற்று முழுதாகச் சீரழிந்துள்ளது.


சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் மருத்துவப் பயிற்சி மாணவி மீது பாலியல் தாக்குதல் நடத்த முயன்ற கொடுமையும் அரங்கேறியுள்ளது. மருத்துவக்கல்லூரி வளாகத்தில் போதிய மின்விளக்குகள், கண்காணிப்புக் கருவி இல்லாததும், குற்றவாளி டாஸ்மாக் மதுபோதையில் குற்றத்திற்கான தூண்டுதலாக இருந்துள்ளது.


திராவிட மாடல்

தமிழகத்தில் உள்ள பல்கலை வளாகம் முதல் மருத்துவக் கல்லூரி வளாகம் வரை போதிய மின் விளக்குகளோ, கண்காணிப்பு கருவிகளோ செயல்பாட்டில் இல்லை என்பது பெருங்கொடுமை. அதற்குப் பதிலாக அரசு விற்கும் மதுவும், அதிகரித்துள்ள கஞ்சா புழக்கமுமே தமிழகம் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளது.
இப்படியொரு மோசமான உட்கட்டமைப்பை வைத்துக்கொண்டு, தமிழகத்தை நாங்கள்தான் முன்னேற்றினோம், உலகம் வியக்கும் திராவிட மாடல் என்றெல்லாம் திமுக ஆட்சியாளர்கள் கூறுவது வெட்கக்கேடானது.
அண்ணா பல்கலைக்கழக மாணவி மீதான பாலியல் தாக்குதலுக்குப் பாதிக்கப்பட்ட பெண் மீதே குற்றஞ்சாட்டியவர்கள், பயிற்சி மருத்துவ மாணவி மீதான பாலியல் தாக்குதலுக்கு நள்ளிரவில் பணிக்குச் சென்றதே காரணம் என்று கூறப்போகிறார்களா?

நடவடிக்கை

பாலியல் தாக்குதலின் போது பயிற்சி மாணவியின் கூக்குரல் கேட்டு அருகிலிருந்தவர்கள் ஓடி வந்ததன் காரணமாகவே மாணவியைக் காப்பாற்ற முடிந்துள்ளது. ஆகவே, தி.மு.க., அரசு இனியாவது மெத்தனமாக இல்லாமல், தமிழகம் முழுவதுமுள்ள அரசு டாக்டர்கள் மற்றும் மருத்துவமனைகளின் பாதுகாப்பினை உறுதிசெய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன். இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.

Advertisement