சேதமான ரேஷன் கடை கட்டடம், குடிநீர் தொட்டி அவதியில் விருதுநகர் தாதம்பட்டி ஊராட்சி மக்கள்

விருதுநகர்:விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தாதம்பட்டி ஊராட்சியில் ரேஷன் கடை கட்டடம் சேதமாகி மூடப்பட்டு, தற்போது பழைய ஊராட்சி அலுவலக கட்டடத்தில் செயல்படுகிறது. மேல்நிலைக் குடிநீர் தொட்டி சேதமாகி இடியும் நிலையில் உள்ளது. வாறுகாலில் குப்பை நிறைந்து கழிவு நீர் செல்ல முடியவில்லை என எண்ணற்ற பிரச்னைகளில் சிக்கி அப்பகுதியினர் அவதிப்படுகின்றனர்.

தாதம்பட்டி ஊராட்சிக்குபட்ட பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட வீடுகளில் மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் பெரும்பாலும் விவசாயம் சார்ந்த தொழில்களில் ஈடுபடுகின்றனர். இப்பகுதியில் ரேஷன் கடைக்கு தனி கட்டடம் இருந்த நிலையில் 20 ஆண்டுகளை கடந்து சேதமான நிலையில் இருப்பதால் மூடப்பட்டது.

தற்போது ரேஷன் கடை பழைய ஊராட்சி அலுவலக கட்டடத்தில் செயல்படுகிறது. ஆனால் இக்கட்டடமும் சேதமான நிலையில் இருப்பதால் ரேஷன் கடைக்கு புதிதாக கட்டடம் வேண்டும். மேலும் மேல்நிலைக் குடிநீர் தொட்டி 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு தற்போது கான்கீரிட் துாண்கள் முழுவதும் சேதமாகி பெயர்ந்து விழுகிறது. இதையும் புதிதாக கட்டிக்கொடுக்க வேண்டும்.

பெரிய வாறுகாலில் குப்பை தேங்கி கழிவு நீர் செல்ல முடியாமல் துர்நாற்றம் வீசுகிறது. இதை சுத்தப்படுத்த போதிய துாய்மை பணியாளர்கள் இல்லாததால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். புதிதாக கட்டப்படும் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே நிலம் பள்ளமாக இருப்பதால் கழிவு நீர் சென்று தேங்கி வருகிறது.

இதனால் நோய்பரவும் அபாயம் உள்ளதால் பள்ளமாக உள்ள நிலத்தை சீரமைத்து கழிவு நீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே போல பயணிகள் நிழற்குடை கட்டடமும் முழுவதும் சேதமாகி இருப்பதால் இந்த இடத்தில் புதிதாக பயணிகள் நிழற்குடை கட்டிக்கொடுக்க வேண்டும்.

புதிய குடிநீர் தொட்டி தேவை



சுப்புராம், விவசாயி: தாதம்பட்டி ஊராட்சியில் சேதமான மேல்நிலைக்குடிநீர் தொட்டியை இடித்து அகற்றி விட்டு புதிதாக மேல்நிலைக் குடிநீர் தொட்டி கட்டி கொடுத்து தடையின்றி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பயணிகள் நிழற்குடை அவசியம்



சங்கர், விவசாயி: இங்குள்ள பயணிகள் நிழற்குடை சேதமாகியும், ரேஷன் கடை கட்டடம் ஏற்கனவே சேதமான கட்டடத்தில் செயல்படுகிறது. இந்த பயணிகள் நிழற்குடை, ரேஷன் கடை கட்டடம் ஆகியவற்றை புதிதாக கட்ட வேண்டும்.

கழிவு நீர் தேக்கம்



முனியாண்டி, விவசாயி: பெரிய வாறுகாலில் உள்ள குப்பையை அகற்றி கழிவு நீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வாறுகால்களை சுத்தமாக வைத்திருக்க உள்ளாட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement