கள் இறக்குவது குறித்து தமிழக சட்டசபையில் 'விறுவிறு' விவாதம்!

16


சென்னை: பனைமரத்தில் இருந்து கள் இறக்குவது குறித்து சட்டப்பேரவையில் விறுவிறுப்பான விவாதம் நடந்தது. அதன் விபரம் பின்வருமாறு:
காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபி மனோகரன்:
நாங்குநேரியில் பனை பொருட்களுக்கான நவீன விற்பனை காட்சிக்கூடம் அமைக்க வேண்டும். கள் மீதான தடையை நீக்கி கள், பதநீரை அரசே கொள்முதல் செய்து ஆவின் போல விற்பனை நிலையங்களை அமைக்க வேண்டும். சர்க்கரையை ரேஷன் கடையில் விற்பனை செய்வது போல், கருப்பட்டியை விற்பனை செய்ய வேண்டும்.

அமைச்சர் பதில்



இதற்கு பதில் அளித்த அமைச்சர் பொன்முடி பேசியதாவது: பனை தொழல் வளர்ச்சிக்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கையை எடுத்து வருகிறது. குறிப்பாக பனை என்பது எல்லா மாவட்டங்களிலும் இல்லை. அமைச்சரின் கோரிக்கை வருங்காலத்தில் பரீசிலனை செய்யப்படும்.




காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபி மனோகரன்: பனையிலிருந்து கள் இறக்குவது தமிழகத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் கேரளா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் விற்பனை செய்யப்படுகிறது.


கள் உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்காது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது. கள்ளுக்கு அரசு விதித்துள்ள தடையை நீக்க வேண்டும். கள் மீதான தடையை அரசு நீக்குமா என்று அமைச்சரின் பதிலை சபாநாயகர் வாயிலாக அறிய விரும்புகிறேன்.

அமைச்சர் பொன்முடி



பனையிலிருந்து பதநீர் இறக்கும் போது கலக்க வேண்டியதை கலந்து விட்டால் போதை பொருளாக மாறிவிடும் என்பது உறுப்பினர் அவர்களுக்கு தெரியும். அது எல்லாம் இருக்க கூடாது என்பதற்கு தான் தடை செய்யப்பட்டுள்ளது. இப்பொழுது எல்லாம் கிடைக்கிறது என அமைச்சர் பொன்முடி பேசிக் கொண்டு இருந்தார்.

சபாநாயகர் அப்பாவு



அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு, பனையில் இருந்து இறக்கும் போது கள் ஆகாது; அது பதநீர் தான்.. அதற்குதான் அனுமதி கேட்கப்படுகிறது என்றார்.



பின்னர் அமைச்சர் பொன்முடி பேசியதாவது: ஒரு காலத்தில் பனங்கள், தென்னங்கள் மரத்தில் இருந்து இறக்கப்பட்டன; அப்போது தடை கிடையாது; கள் குடிக்க அனுமதி இருந்தது. ஆனால் அந்த பானங்களை போதைப் பொருளாகவும் மாற்ற சில பொருட்கள் கலந்தனர்.

பனை பொருட்கள் இணையதளம் மற்றும் செயலி வாயிலாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கள் இறக்குவது குறித்து முதல்வர் எதிர்காலத்தில் பரிசிலீப்பார்.



இதனைத் தொடர்ந்து கேள்வி எழுப்பிய, எம்.எல்.ஏ., அசோகன், பதநீர் 2 நாட்களை கடந்தால் கள்ளாக மாறுகிறது. இதனால் கள் என்று வழக்கு போடாமல், தற்போது கள்ளச்சாராயம் விற்பனை செய்வதாக வழக்கு போடுகிறார்கள். இதனை கவனத்தில் கொண்டு, வழக்குபோடுவதை கட்டுப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்தார்.



அமைச்சர் பொன்முடி: கைது செய்பவர்கள் குறித்து முதல்வரிடம் கலந்து பேசி நல்ல முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்தார். சபாநாயகர் கள் குறித்து பேசுவதை பார்த்தாலே இதில் அவருக்கு எவ்வளவு ஆர்வம் உள்ளது என தெரிகிறது. அவர்கள் வசிக்கும் பகுதியில் அதிக பனை மரங்கள் இருக்கிறது. இது குறித்து முதுல்வர் ஸ்டாலின் இடம் கலந்து பேசி முடிவு எடுப்போம்.
இவ்வாறு விவாதம் நடந்தது.

Advertisement