500 எடை இரும்பு பெட்டகத்துடன் நகை, வெள்ளி திருடிய 4 பேர் கைது

தஞ்சாவூர்,: தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே மருங்கப்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் தேவசேனன், 66. இவர் தன் மனைவி பூங்கோதையுடன், கடந்த மார்ச் 22ம் தேதி, மருமகள் அஸ்வினியை பார்க்க, கடலுார் சென்று இருந்தனர்.

இந்நிலையில், கடந்த 24ம் தேதி, வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள், மாடி மற்றும் தரை தளத்தில் இருந்த 250 கிலோ எடையிலான இரண்டு திண்டுக்கல் இரும்பு பெட்டகத்தை துாக்கி, 80 அடி துாரத்திற்கு, வீட்டின் பின்புறம் இழுத்துச் சென்று, வாகனத்தில் ஏற்றிச் சென்றுள்ளனர்.

இந்த பெட்டகங்களில், 12 கிலோ வெள்ளி பொருட்கள், 12 சவரன் தங்க நகைகள் இருந்தன என தேவசேனன் சேதுபாவாசத்திரம் போலீசில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில், தனிப்படை போலீசார், மருங்கபள்ளம் அதன் சுற்றுவட்டாரங்களில் சுமார் 15 கி.மீ.,துாரத்திற்கு, பல்வேறு இடங்களில் உள்ள சி.சி.டி.வி., கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.

இதில், மருங்கபள்ளம் பகுதியில் இருந்து சைலோ கார் ஒன்று புக்கரம்பை வரை சென்று உறுதியானது. அதன் அடிப்படையில், கார் நம்பரை வைத்து, புக்கரம்பை ராஜமடத்தான் தெருவைச் சேர்ந்த சின்னமணி, 30, சொக்கநாதபுரம் சிலம்பன் தெருவைச் சேர்ந்த லெனின், 29, பள்ளத்துாரை சேர்ந்த ராஜா,38, பட்டுக்கோட்டை, சீனிவாசநகர் பகுதியைச் சேர்ந்த செல்வம்,39, ஆகிய நான்கு பேரை நேற்று போலீசார் கைது செய்தனர். மேலும், திருட்டிற்கு பயன்படுத்திய சைலோ கார் மற்றும் திருடிய பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

விசாரணையில், கைது செய்யப்பட்ட நான்கு பேரும், இரண்டு பெட்டங்களை திருடி சென்று, காட்டாறு ஒன்றில், பெட்டங்களை உடைத்து, பொருட்களை எடுத்துக்கொண்டு, இரும்பு பெட்டங்களை புதர்களில் வீசி சென்றது தெரியவந்தது.

Advertisement