சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் பாடப்புத்தகங்கள் மாற்றம்

சென்னை: புதிய கல்வி கொள்கையின்படி, சி.பி.எஸ்.இ., பளளிகளில், இந்த ஆண்டு நான்கு வகுப்புகளுக்கு, புதிய பாடப்புத்தகங்கள் வெளியாக உள்ளன.


புதிய கல்வி கொள்கையின்படி, சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கான, என்.சி.இ.ஆர்.டி., பாடப்புத்தகங்கள் மாற்றப்பட்டு வருகின்றன. ஏற்கனவே, பாலர் வகுப்பான பால்வாடிகா முதல், இரண்டு, மூன்று மற்றும் ஆறாம் வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்கள் மாற்றப்பட்டன. இந்த ஆண்டு நான்கு, ஐந்து, ஏழு மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு, புதிய பாடப்புத்தகங்கள் வெளியாக உள்ளன.


இந்த புத்தகங்களில், புதிய சீர்திருத்தங்களின்படி, பாடங்களின் அளவு குறைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், புத்தகங்கள் கிடைக்கும் வரை, புதிய பாடங்கள் குறித்த அறிமுகத்தை வழங்கும் வகையில், இணைப்பு பாடங்கள் என்ற, 'பிரிட்ஜ் கோர்சை' நடத்த, சி.பி.எஸ்.இ., அறிவுறுத்தி உள்ளது.


அதாவது, ஏப்., 1 முதல் சி.பி.எஸ்.இ., பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், ஐந்து, ஏழாம் வகுப்புகளுக்கு இரண்டில் இருந்து நான்கு வாரங்கள் வரை, எட்டாம் வகுப்புக்கு ஆறு வாரங்கள் வரை, இணைப்பு பாடத்தை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement