விரல் ரேகை பதித்தால் தான் இனி காஸ் சிலிண்டர் கிடைக்கும்!

சென்னை:தமிழகத்தில், சமையல் காஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்கள், வரும் 31ம் தேதிக்குள் விரல் ரேகை பதிவு செய்யவில்லை எனில், சிலிண்டர் கிடைக்குமா என்ற குழப்பம் எழுந்துள்ளது.
இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்களுக்கு, தமிழகத்தில் 2.35 கோடி வீட்டு சமையல் காஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்கள் உள்ளனர். இந்நிறுவனங்கள், வீடுகளுக்கு, 14.20 கிலோ எடையில் சமையல் காஸ் சிலிண்டரை, சந்தை விலைக்கு விற்கின்றன.
அந்த விலைக்கு வாங்கியதும், மத்திய அரசின் மானிய தொகை, பயனாளியின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. எனவே, சிலிண்டர் இணைப்பு பெற்றிருக்கும் பயனாளியின் உண்மைத் தன்மை சரிபார்ப்பு பணி நடக்கிறது.
அதன்படி, சிலிண்டர் இணைப்பு யார் பெயரில் உள்ளதோ, அவர் காஸ் ஏஜன்சிக்கு சென்று, கருவியில் விரல் ரேகை பதிய வேண்டும்.
இது தவிர, விழி ரேகை அல்லது முகப்பதிவு வாயிலாகவும் வாடிக்கையாளர் சரிபார்ப்பு நடக்கிறது. இந்த பணியை, வரும் 31ம் தேதிக்குள் முடிக்க, மத்திய அரசு அவகாசம் அளித்துள்ளது.
இதுவரை, வாடிக்கையாளர்களில், 50 சதவீதம் அளவுக்கு கூட சரிபார்ப்பு பணி முடியவில்லை. எனவே, விரல் ரேகை பதிவு செய்யாதவர்களுக்கு, ஏப்., முதல் காஸ் சிலிண்டர் கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்து உள்ளது.
இந்தியன் ஆயில் அதிகாரி ஒருவர் கூறியதாவது: பலர் இன்னும் தங்களின் விரல் ரேகை பதிவு செய்யாமல் உள்ளனர். எனவே, மார்ச் 31ம் தேதிக்கு பின்பும், வழக்கம் போல் சிலிண்டர்களை முன்பதிவு செய்து வாங்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.













