செங்கோட்டை பராமரிப்பு மனு; 20 ஆண்டுக்கு பின் தள்ளுபடி

புதுடில்லி : டில்லி செங்கோட்டையின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தொடர்பாக, 20 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருந்த பொதுநல மனுவை உச்ச நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.
'டில்லியில், முகலாயர் ஆட்சிக் காலத்தில், 17ம் நுாற்றாண்டில் கட்டப்பட்ட செங்கோட்டையின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் சர்வதேச தரத்தில் மேற்கொள்ளப்படவில்லை' என, ராஜிவ் சேத்தி என்பவர், உச்ச நீதிமன்றத்தில், 2003ல் பொதுநல மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இந்திய தொல்லியல் துறை இயக்குனர் தலைமையில், ஒன்பது உறுப்பினர்கள் அடங்கிய நிபுணர் குழுவை அமைத்து, 2004, ஆகஸ்ட் மாதம் உத்தரவிட்டது. நினைவுச்சின்னத்தை பாதுகாப்பதற்கான விரிவான வழிமுறைகளையும் வழங்கியது.
அதன் பின் இந்த வழக்கு விசாரணைக்கு வரவில்லை. 20 ஆண்டுகள் கடந்த நிலையில், இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதிகள் சூர்யகாந்த், என்.கோட்டீஸ்வர் சிங் பிறப்பித்த உத்தரவு:
செங்கோட்டையின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு சர்வதேச தரத்தில் மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்ய ஒன்பது பேர் அடங்கிய நிபுணர் குழு அமைக்கப்பட்டு, 20 ஆண்டுகள் கடந்துவிட்டன. நீதிமன்றத்தின் அறிவுறுத்தல்களை நிபுணர் குழு பின்பற்றவில்லை என நம்புவதற்கு போதிய காரணம் எதுவும் இல்லை.
பணிகள் எதுவும் செய்யப்படாமலோ அல்லது விடுபட்டோ போயிருந்தால், மனுதாரர் இந்த நீதிமன்றத்தில் புதிய மனுவை தாக்கல் செய்ய சுதந்திரம் உள்ளது. இந்த மனுவை நீதிமன்றம் முதன்முதலாக பரிசீலித்து, 20 ஆண்டுகள் ஆகிவிட்டன. இதை இன்னும் நிலுவையில் வைத்திருப்பதில் எந்த பயனும் இல்லை. எனவே மனுவை தள்ளுபடி செய்கிறோம். இவ்வாறு உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

