திரிபுராவுக்கு முதன்முறையாக சரக்கு ரயில் சேவை துவக்கம்

அகர்தலா : அகர்தலா - அகவுரா ரயில் இணைப்பு திட்டத்தின் கீழ், அசாமின் குவஹாத்தியில் இருந்து புறப்பட்ட முதல் சரக்கு ரயில், திரிபுராவின் நிசிந்தாபூர் ரயில் முனையத்துக்கு வெற்றிகரமாக வந்து சேர்ந்தது.

வடகிழக்கு மாநிலமான திரிபுராவின் அகர்தலா - நம் அண்டை நாடான வங்கதேசத்தின் அகவுரா நகரை இணைக்கும் வகையில், ரயில் இணைப்பு திட்டம் 2023 நவம்பரில் அறிமுகப்படுத்தப்பட்டது. சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்த நிலையில், வங்கதேசத்தில் நிலவும் அரசியல் குழப்பத்தால் இத்திட்டம் இதுவரை செயல்படுத்தப்படவில்லை.

இத்திட்டத்தின் கீழ், அசாமின் குவஹாத்தியில் இருந்து, 11 பெட்டிகளில் சிமென்ட் மூட்டைகளை ஏற்றிக் கொண்டு, திரிபுராவின் மேற்கு திரிபுரா மாவட்டத்தில் உள்ள நிசிந்தாபூர் ரயில் முனையத்துக்கு, முதன்முறையாக சரக்கு ரயில் நேற்று முன்தினம் வெற்றிகரமாக வந்தது.

இது குறித்து, வடகிழக்கு எல்லைப்புற ரயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது:

குவஹாத்தி அருகே டெட்டேலியாவில் இருந்து புறப்பட்ட சரக்கு ரயில், நிசிந்தாபூர் ரயில் நிலையத்துக்கு வெற்றிகரமாக வந்தது. இது, அகர்தலா- - அகவுரா ரயில் இணைப்பு திட்டத்தின் கீழ், சரக்கு ரயில் போக்குவரத்தில் குறிப்பிடத்தக்க மைல்கல்.

சரக்கு போக்குவரத்திற்காக நிசிந்தாபூர் ரயில் முனையத்தை திறப்பது, மேற்கு திரிபுராவின் முக்கிய இடங்களில் நெரிசலை குறைக்கும். மேலும், சரக்கு இயக்கத்தை மேம்படுத்தும்; போக்குவரத்து நேரத்தை குறைக்கும்; மேம்படுத்தப்பட்ட ரயில்வே உட்கட்டமைப்பு வாயிலாக பிராந்திய பொருளாதார வளர்ச்சியை ஆதரிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement